Share via:
பா.ம.க. மாநாட்டில் பேசிய அன்புமணி, ‘’நான் மற்ற தலைவர்கள் போல
நான் கிடையாது… அத்து மீறு, அதை செய், இதைச் செய் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
முதலில் படித்து வேலைக்கு போக வேண்டும். அதன் பிறகு கட்சிக்கு வர வேண்டும். எனது தம்பிகள்
ஒரு வழக்கு கூட வாங்கக் கூடாது’’ என்று நேரடியாக திருமாவளவன் மீது ஆவேசம் காட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுப்பது போன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய
விசிக தலைவர் திருமாவளவன், “கல் எடுத்து அடியுங்கள், மரத்தை வெட்டிப் போடுங்கள் என்று
சொன்ன நிலை மாறி, இப்போது கல்வியை முன்னிறுத்தி எல்லோரும் படிக்க வேண்டும் என சொல்ல
முன்வந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், விசிகவின் அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி
அடி என்ற முழக்கம் சாதி அடிப்படையில் சொல்லப்பட்டது அல்ல. அதிகாரத்தின் அடக்குமுறைக்கு
எதிராக அந்த முழக்கத்தை விசிக 1990களின் தொடக்கத்தில் முன்வைத்தது. மதுரையில் நடைபெற்ற
விசிக பேரணியில் காவல் துறை மிக மோசமாக தாக்குதல் நடத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தியபோது,
காவல் துறைக்கு எதிராக நான் முன்மொழிந்த முழக்கம் அது. ஒரு சாதிக்கு எதிராகவோ அல்லது
ஆதரவாகவோ எழுந்த முழக்கம் அல்ல அது.
இந்த அத்துமீறலுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் அத்துமீறி என்று
சொல்ல மாட்டேன் என்று சிலர் கலாய்க்கின்றனர். அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல்
உள்ளது. அது ஒரு தொலைநோக்குப் பார்வை. 2000 ஆண்டு கால அடிமைத்தளையை உடைக்கக்கூடியது.
அமைப்பாவதால் மட்டும் தான் அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே
அடக்குமுறைகள் உடையும். தனியாளாக அத்துமீற முடியாது. அமைப்பாக இருந்தால் தான் அத்துமீற
முடியும். தனியாளாக கோயிலுக்குள் நுழைய முறபட்டால் விட மாட்டார்கள். ஆனால், அமைப்பாகத்
திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
நடக்கக்கூடாது என்றால் நடப்போம் பேசக்கூடாது என்றால் பேசுவோம்.
இந்த இடத்தில் நுழையக்கூடாது என்றால் நுழைவோம். எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள்
உள்ளது என்பதற்கான குரலுக்குப் பெயரே அத்துமீறு’’ என்று பேசியிருக்கிறார்.
தேர்தல் வந்துவிட்டது. ஆகவே, இனி இரண்டு பக்கமும் மோதலை எதிர்பார்க்கலாம்.