Share via:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் அண்ணாமலை தொடர்ந்து
தமிழக அரசியலை விமர்சனம் வைத்து வருகிறார். ஆந்திராவில் இருந்து அண்ணாமலை எம்.பி.யாகி,
அடுத்து அமைச்சராகிவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை
என்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கொதிநிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர்
பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட
நேரத்தில், அவர் தேசிய அரசியலில் பயன்படுத்திக்கொள்ளப்படுவார் என அமித்ஷா அப்போது உறுதி
அளித்தார். இதையடுத்து அண்ணாமலை அமைச்சராகப் போகிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஆந்திராவில் மாநிலங்களவை எம்.பி. காலியாக உள்ளது. அதற்கு பா.ஜ.க
வேட்பாளரை நிறுத்தும் என்று அறிவிக்கப்பட்டதால் அண்ணாமலைக்கே வாய்ப்பு என்று சொல்லப்பட்டு
வந்தது. ஆனால் பாகா வெங்கட சத்யநாராயாணாவை பா.ஜ.க. வேட்பளராக்கியுள்ளது. இது எங்களுக்கு
கடும் அதிருப்தியாக உள்ளது.
உடனடியாக அண்ணாமலைக்கு பாஜக இளைஞரணி தேசியத் தலைவர், பிரதமருக்கு
ஆலோசகர் போன்ற ஏதாவது ஒரு முக்கிய பதவி தர வேண்டும். தமிழகத்தில் கட்சியை இந்த அளவுக்கு வளர்த்து அ.தி.மு.க.வுக்கு
இணையாக உருவாக்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்காக அண்ணாமலையை மாற்றியிருப்பது அவமானம்.
தேசிய அளவில் அண்ணாமலைக்கு பெரிய பதவி தரவில்லை என்றால் நாங்கள்
அ.தி.மு.க.வுக்கு வேலை செய்ய மாட்டோம். எங்களுக்கு பா.ஜ.க.வை விட அண்ணாமலையே முக்கியம்’’
என்று கொதிக்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன் கவனிக்க வேண்டிய விஷயம் இது.