Share via:
டாக்டர் ராமதாஸ் நடத்திவரும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல்
தொடர்ந்து புறக்கணித்துவரும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று எழுந்திருக்கும்
பரபரப்புக்குப் பின்னே இருக்கிறது, தேர்தல் நாடகம்.
நேற்று தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் பு.தா.அருள்மொழி
தெரிவித்திருந்தார். வன்னியர் சங்கத்தில் ஒரு மாநில தலைவர், 4 மாநில செயலாளர்கள்,
62 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதேபோல் 2 துணை செயலாளர்கள்,
2 துணை தலைவர்கள், ஒரு பொருளாளர் உள்ளனர். இதில் வட மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள்
மற்றும் மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பேசிய ராமதாஸ், ‘மாமல்லபுரம் மாநாட்டில் கூறியதுபோல
10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு
சந்திக்கும். அந்த கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. தற்போதைக்கு
கட்சி பொறுப்புகளில் மாற்றம் ஏதுமில்லை. எப்போதும்போல கட்சியும், சங்கமும் செயல்பட்டு
வருகிறது. 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்பாக அனைவரையும் கூட்டி பேசிதான்
அறிவிப்போம்’’ என்று கூறினார்.
ராமதாஸ் சொல்வதைக் கேட்காத அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்
என்று ஒரு தகவல் கசிகிறது. இது குறித்து பேசும் பா.மக.வினர், ‘’அப்பாவுக்கும் மகனுக்கும்
மோதல் நடப்பதாக வெளியே வேண்டுமென்றே செய்திகளை கசிய விடுகிறார்கள். அப்படி எதுவும்
எப்போதும் நடக்கவே செய்யாது. இப்போது பா.ம.க.வுக்கு
பா.ஜ.க. கூட்டணி தவிர வேறு வழியே கிடையாது. ஆனால், வழக்கம்போல் பேரம் பேச வேண்டும்
என்று ராமதாஸ் நினைக்கிறார். ஆளுக்கொரு கட்சியாக உடைத்து பிரச்னை செய்யாமல் இருக்கவேண்டும்
என்பதற்காகவும், கூடுதல் தேர்தல் செலவுக்காகவும் இப்படியொரு சீன் போடுகிறார்கள். திமுக
கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிய விடுவதும் இவர்களே தான். திமுகவில்
பா.மக.வுக்கு கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. கட்சியை பரபரப்பில் வைத்துக்கொள்ளவே இப்படி
பேசி வைத்துக்கொண்டு சண்டை போடுவதாக நடிக்கிறார்கள்’’ என்று சொல்கிறார்கள்.
இதை எல்லாம் உண்மை என்று நம்பும் பாட்டாளிகள் நிலையே பரிதாபம்.