Share via:
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின்
கூறியது போலவே, ‘அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி’ என்று சொல்லி போராட்ட அறிவிப்பு
வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து அவர், ‘’ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக
இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு
இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் FIR பதிய
அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர்
திரு. சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது. மேலும், தன்னைப்
போன்றே “20 வயதுள்ள 20 பெண்கள்” தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக
அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
“பொள்ளாச்சி பொள்ளாச்சி”
என்று மேடைதோறும் கூவிய ஸ்டாலின் அவர்களே, “உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே
சாட்சி” தானே? பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை
நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்! பாதிக்கப்பட்ட பெண்
தெளிவாக “உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை” அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட
திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர்
அன்பில் மகேசின் பிஏ உமா சங்கர் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி
கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.
தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும்
‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக
துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த “டம்மி அப்பா” அரசு
நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேட்டவர் 21ம் தேதி போராட்ட அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று அதிமுகவினர்
போஸ்டர் ஒட்டி கலக்கிவருகிறார்கள்.