Share via:
பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்திய தந்தையும்
பா.ம.க. நிறுவனருமான டாக்டர் ராமதாஸை நடக்கையிருக்கும் முழு நிலவு மாநாட்டில் வலுக்கட்டாயமாக
ஓய்வுக்கு அனுப்புவதற்கு அன்புமணி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
பாமகவுக்குள் உட்கட்சி மோதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமதாஸும்
அன்புமணியும் தனித்தனியே ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் மே 11ம் தேதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில்
நடைபெற உள்ள முழுநிலவு மாநாட்டுக்கான பந்தல் கால் புஜை இன்று காலை நடைபெற்றது. பாமக
தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றனர். அன்புமணி ராமதாஸ்
பூஜை செய்தது மட்டுமின்றி இடத்தை சமப்படுத்தும் ஜேசிபி வாகனத்தையும் இயக்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய அன்புமணி, ‘’அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக
சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சரியான முறையில்
இந்த மாநாடு நடைபெறும் என்றும் சிறு அசம்பாவிதம் கூட நடைபெறாமல் அமைதியான முறையில்
இந்த மாநாடு நடைபெறும். பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் அனைத்து வளர்ச்சியும்
அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும் இந்த மாநாடு யாருக்கும்
எதிரானது அல்ல’’ என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதா என செய்தியாளர்கள்
கேள்வி எழுப்பியதற்கு அன்புமணி பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். டாக்டர் ராமதாஸை
முழுமையாக ஓரம் கட்டுவதற்கு அன்புமணி முடிவு செய்திருக்கிறார். ஆகவே, மாநாட்டில் வைத்து
ராமதாஸ் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதே வன்னியர்கள் விருப்பம் என்று வெளிப்படையாக அறிவித்து
கட்டம் கட்டுவார் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து பா.ம.க. கூடாரம் பதைபதைத்துப்
போயிருக்கிறது.