Share via:
கோவையில் விஜய்க்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அனைத்துக் கட்சிகளையும்
அலற விட்டுள்ளது. காசு கொடுக்காமல் தானாகச் சேர்ந்த கூட்டம், அத்தனை தொகுதியும் எங்களுக்குத்
தான் என்று விஜய் கட்சியினர் உற்சாகத்தில் துடிக்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், கோவையில் நடைபெறும்
கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் வந்து இறங்கினார்.
கோவை ஏர்போர்ட் வளாகத்தில் திரளான கூட்டம் கூடியது. இதையடுத்து மாலையில் விழா நடக்கும்
இடத்துக்கு வருகை தந்தார். விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி
பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்த
நேரத்தில் எக்கச்சக்கத் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.
இது குறித்து பேசும் விஜய் ரசிகர்கள், ‘’எம்.ஜி.ஆருக்குப் பிறகு
ஒரு கட்சித் தலைவருக்கு காசு கொடுக்காமல் மக்கள் கூட்டம் தானாக கூடுகிறதென்றால் விஜய்க்கு
மட்டும் தான். ரசிக கூட்டம் என்று சிறுமைப்படுதினாலும் சரி விலைகொடுக்க முடியாத ஒரு
பெருங்கூட்டம் உண்டு. விஜய்க்கு கோவையில் கூடிய கூட்டம் ஆளுங்கட்சி தி.மு.க. மட்டுமின்றி
அத்தனை கட்சிகளின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கும்.
ஸ்டாலினோ,உதயநிதியோ காசு கொடுத்தே ஆள் கூட்டினாலும் இத்தனை பெரிய
கூட்டத்தையும் எழுச்சியையும் உருவாக்கவே முடியாது… போகிற போக்கைப் பார்த்தால் அத்தனை
தொகுதிகளையும் அள்ளிவிடலாம்’’ என்று குஷியாகப் பேசுகிறார்கள்.
அதேநேரம் தி.மு.க.வினர், ‘’கமல்ஹாசன், அண்ணாமலைக்குக் கூடிய கூட்டத்தை
தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். சன்னி லியோன் வந்தால் இதை விட அதிகமான கூட்டம்
வரும். இதெல்லாம் ஓட்டாக மாறாது’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
இன்றைய தினம் விஜய் அதிகமாகப் பேசுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால்,
நேற்றைய விட அதிக கூட்டம் வர வாய்ப்பு உண்டு என்பதால் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.