Share via:

சட்டமன்றத்தில் திமுக நாள் தோறும் ஏதேனும் பரபரப்பைக் கிளப்புகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் அ.தி.மு.க. விவகாரமும் தினமும் அலசப்படுகிறது. விஜய்
வெளியே வந்தாலும் வராவிட்டாலும் அது செய்தியாக வருகிறது. இந்த நிலையில் மூச்சு காட்டாமல்
இருந்த நாம் தமிழர் கட்சியினர் இப்போது ஒன்று சேர்ந்து ஜாட் திரைப்படத்துக்கு கடுமையாக
எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் போராடவும் தயாராக உள்ளனர்.
சமீபத்தில் திரைக்கு வந்த “ஜாட்” திரைப்படத்தில் தமிழீழ
மக்களுக்காக போராடிய உன்னத இயக்கமான விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவது போல் காட்சிகள்
இடம்பெற்றது வன்மையாக கண்டிக்கதக்கது தமிழர்களை திட்டமிட்டு பயங்கரவாதிகளாக காட்ட முயற்சித்திருக்கிறார்
இயக்குநர் இன்னும் எத்தனை படம் தான்டா எங்களுக்கு எதிராக எடுப்பீங்க? என்று கொந்தளிக்கின்றனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
‘’இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி,
தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான
கண்டனத்துக்குரியது. வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு
சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து தமிழீழ
விடுதலைப்போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை
ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம்
எடுக்கப்பட்டுள்ளதை எளிதில் உணர முடிகிறது. தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின்
உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை
பார்க்க முடியாது. ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச்
சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை
உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள்
போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து
நிறுத்தும்’’ என்று அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் முத்துவேல் கரிகாலன் என்று மறைந்த முன்னாள் முதல்வர்
மு.கருணாநிதியை இழிவு செய்யும் விதத்தில் வில்லனுக்கு பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இந்த நிலையில் உடன்பிறப்புகள், ‘இந்த படத்தை இந்தியா முழுக்க தடை
செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைக்காதது ஏன்..? முதலாளி மோடி கோபித்துக்கொள்வாரா?’
என்று கேள்வி எழுப்புகிறார்கள்.