Share via:
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில்
பனை மரம் ஏறி கள் இறக்கிக் குடித்தார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இயற்கை பானம் என்பதால் கள் குடிப்பதில் தவறு இல்லை என்று கூறியிருப்பது போன்று இயற்கையாக
விளையும் கஞ்சா விற்பனைக்கும் போராட்டம் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்
அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறினார். இவருக்காக ஸ்பெஷலாக பனை மரத்தில்
படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. அதன் பின்னர் கீழே இறங்கிய சீமான், அங்கு அமைக்கப்பட்டிருந்த
மேடையில் நிர்வாகிகளுடன் பனையோலை பட்டையில் கள் அருந்தினார்.
இதையடுத்து பேசிய சீமான், ‘’பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும்
கள் வேளாண்மையோடு சேர்ந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை இருந்ததை உடைத்தெறிந்தோம்.
அதேபோல, கள் இறக்க அனுமதி மறுக்கப்படுவதையும் உடைத்தெறிவோம். கள் போதை பானம் என்றால், டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது
மிளகு ரசமா? அல்லது புனித நீரா? மற்ற மாநிலங்களில் கள் இறக்க அனுமதி இருக்கும்போது,
தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்படுவது ஏன்? பனை கள்ளுக்கு ஏற்பட்ட தடையால் பனை மரங்கள்
குறைந்து வருகின்றன. எனவே, நாம் தமிழர் கட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் பனை விதை
விதைத்து வருகிறோம். கள் எங்கள் உரிமை. கள்ளுக்கான தடையை மீட்டெடுப்பதே எங்களது கடமை’’
என்று பேசினார்.
இதற்கு திமுகவினர், ‘’கள் இயற்கை உணவு என்றால் அதை ஏன் சீமானின்
மனைவி, மகன் குடிப்பதில்லை. அவர்களை குடிக்க வைப்பாரா… அதே போல் கஞ்சா செடியும் இயற்கை.
இனி, கஞ்சா விற்பனை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துவாரா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ‘’சட்ட விதிமுறைகளை மீறி ’கள் ஓர் உணவு’ என தவறான பிரச்சாரம் செய்யும்
சீமான் மற்றும் சட்டவிரோதமாக இன்று ஜூன் மாதம் 15 ஆம் தேதி பெரியதாழையில் ’கள்’ இறக்கியதுடன்,
அரிவாளை எடுத்துத் தூக்கிக் காட்டி காவல்துறைக்குக் கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும்
அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படவில்லையெனில்,
தமிழ்நாடு எங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக கடும் போராட்டம் வெடிக்கும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.