Share via:

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த
சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு
குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பெரியமுத்தையம்பட்டியை
சேர்ந்தவர் செல்வராஜ் (43) – சந்திரா தம்பதியினர். செல்வராஜ் தனியார் கம்பெனியில் வேலை
செய்து வருகிறார். இவர்களுக்கு சத்யா(18) என்ற மகள், துளசிநாத் என்ற மகன் உள்ளனர்.
கடந்த ஆண்டு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சத்யா ஜலகண்டாபுரத்தில் உள்ள நீட் பயிற்சி
மையத்தில், கடந்த 10 மாதமாக படித்து வந்தார்.
கடந்த முறை நீட் தேர்வு எழுதி அதில் 333 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளார்,
எனவே இம்முறை எப்படியும் அதிக மதிப்பெண் பெற முயன்றுள்ளார். ஆனால் டெஸ்ட் தேர்வுகளில்
தன்னால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் புலம்பி வந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில்,
இம்முறையும் தம்மால் அதிக மதிப்பெண் பெற முடியாதோ என்ற அச்சத்தில் கடந்த 31-ஆம் தேதி
எறும்புப் பவுடரைக் கரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்து
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா நேற்று உயிரிழந்திருக்கிறார்.
நீட் தேர்வு மருத்துவப் படிப்பை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு
எட்டாக்கனியாக மாற்றுகிறது என்பது மட்டுமின்றி, அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்ததற்கு இது தான் காரணம்
ஆகும். நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான
ஒரு மாதத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆனால், இது குறித்து மத்திய அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை. தி.மு.க. ஆட்சியும் தீர்மானம்
நிறைவேற்றினால் போதும் என்று செயல்படுகிறார்கள். கல்வியை விட உயிர் பெரிது என்பதை மாணவர்களுக்கு
உணர்த்துவதற்காவது அரசுகள் முயல வேண்டும். பிள்ளைகள் வாழ்க்கை பகடைக்காயாக மாற்றப்பட்டிருப்பது
கடும் வேதனை.