Share via:

நீட் தேர்வு நெருங்கும் நிலையில் மீண்டும் மீண்டும் அச்சத்தில்
தற்கொலை செய்துகொள்ளும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த மார்ச் மாதம்
2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, அதைத் தொடர்ந்து மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம்
தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, நேற்று
புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு விலக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை
குறித்து விவாதிப்பதற்காக, வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடன்
ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நீட் மரணங்கள் குறித்து
ஸ்டாலின் அமைதியாக இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச்
சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது
என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து
கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சக்தி புகழ்வாணி
அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக
காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார். மே மாதம்
4-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க அதில் தம்மால் போதிய
மதிப்பெண்களை எடுக்க முடியுமா? என்ற அச்சமும், பதட்டமும் சக்தி புகழ்வாணிக்கு அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து டாக்டர் ராமதாஸ், ‘’நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை
என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது. ஒருபுறம் கடுமையான
போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க
முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும்
அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு
தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், பிள்ளைகள் மருத்துவம்
படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும்.
மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த
ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக
இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது. அதற்காக
தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும்.
தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை
ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி
மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. மாணவர்கொல்லி நீட் தேர்வை
திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது.
அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது. நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட
சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில்,
அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஸ்டாலின் இனியும் அமைதியாக இருக்கலாமா..? மாணவர்கள் அச்சத்தைத்
தீர்க்கும் முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்.