Share via:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதன்
தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின்
மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, நேருவின் சகோதரர் இடங்களில் அமலாக்கத்
துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழக அமைச்சர்களில் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுபவர்
நேரு. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராகவும்
தி.முக.வின் முக்கியப் புள்ளியாகவும் இருப்பவர். கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்
டி.வி.ஹெச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்று ரவிச்சந்திரனின் கட்டுமான
நிறுவனங்கள், அவருக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
ரவி வசித்து வரும் சி.ஐ.டி. இல்லம் மற்றும் டிவிஹெச் குரூப் கட்டுமான
நிறுவனம் இயங்கும் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர்
உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம்
தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னையில்
சிக்கியிருந்த நேருவின் குடும்பத்தை இத்தனை ஆண்டுகளாக அண்ணாமலை மூலம் மத்திய அரசிடம்
இருந்து நேரு காப்பாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது அண்ணாமலைக்கு பா.ஜ.க.வில்
பிடிமானம் போய்விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை என்று கூறப்படுகிறது. தி.மு.க.வின்
சீனியர் அமைச்சர்கள் அனைவர் மீதும் அடுத்தடுத்து ரெய்டு நடக்கும் என்றே தெரிகிறது.