Share via:
தமிழகத்தில் சட்டமன்றம் களை கட்டிவருகிறது. தினம் ஒரு மோதல், தினம்
ஒரு அறிக்கை என்று மக்கள் பிரச்னைகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று, ‘அந்த
தியாகி யார்?’ என்று பேட்ஜ் அணிந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து, ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
இது தமிழகம் முழுக்க வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் தலைமையகம் தொடங்கி
பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அறிக்கையில்
ஆயிரம் கோடி ரூபாய் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த டாஸ்மாக்_ஊழல் பின்னணியில்
உள்ள தியாகி_யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்பதை அறிவிக்கும்
போராட்டம் போன்று, ‘அந்த தியாகி யார்?’ என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை
நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை கட்சியின் தியாகி என்று முதல்வர்
ஸ்டாலின் பாராட்டியிருந்தார். அதோடு, ‘நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று
பா.ஜ.க.வுடன் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தைரியம் இருக்கிறதா என்றும் முதல்வர்
ஸ்டாலின் கேட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரத்தில் நடவடிக்கை
எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தைரியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
ஆகவே, இன்றைய அரசியல் விவகாரத்தை திமுக பக்கம் திசை திருப்புவதற்கு
மீண்டும் யார் அந்த தியாகி என்ற விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருக்கிறார்.