Share via:
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்துவந்த அதிகாரப் போட்டி
தந்தையர் தினத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. பா.ம.க.வுக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம்
செய்யப்பட்டிருப்பதை அடுத்து கட்சி இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது.
பிரச்னை தொடங்கிய நேரத்திலேயே கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி
பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ்
நீக்கினார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர்
வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு
முரளி சங்கர் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அன்புமணி, ‘தந்தையர்
எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது
தந்தையரின் திருப்பணி.தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!”
என உலக தந்தையர் தினத்தை ஒட்டி பதிவிட்டிருந்தார்.
நேற்று திருவள்ளூர் மாவட்டம், மணவாளர் நகர் அருகே ஒண்டிக்குப்பம்
பகுதியில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பு வன்னியர்
சங்கத்தை தொடங்கி சமூக நீதிக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். அதற்கு போதிய பலன்
கிடைக்கவில்லை. அதன்பின்னர்தான் பாமகவை தொடங்கினார். சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு
என திமுகவினர் முற்போக்கு பேசுவார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். திமுகவை
சமூக நீதியின் துரோகியாக நான் பார்க்கிறேன். சமூக நீதி பற்றி பேச தகுதியற்றவர்கள் முதல்வர்
ஸ்டாலினும், திமுகவும்தான்.
தமிழகத்தை ஆளும் கட்சி திமுக. மக்களவையில் 40 பேர் திமுக கூட்டணியினர்
உள்ளனர், மாநிலங்களவையில் 12 பேர் திமுகவில் உள்ளனர். இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு
திமுக சமூக நீதிக்காக செய்தது என்ன?. சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்புக்காக நாங்கள்
திமுகவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதனை திமுக அரசு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு
இல்லை. எனவே இதனை மக்களிடம் மிகப்பெரிய பிரச்சாரமாக முன்னெடுக்க வேண்டும்.
நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும். வருகின்ற 2026ல் பாமக
அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். அடுத்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவர
நாம் கட்சியை நடத்தவில்லை. நாம் ஆட்சிக்கு வரவேண்டும். நாம் அங்கம் வகிக்கும் ஆட்சி
அமைந்தால்தான் தமிழகத்தில் சமூக நீதி நிலைநிறுத்தப்படும். எனவே ஜூலை 24ம் தேதி ராமதாஸ்
பிறந்தநாளில் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் தொடங்கவுள்ளேன். 100 நாட்கள் தமிழகம்
முழுவதும் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன். திமுக ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது…’’
என்று கூறினார்.
அதோடு ராமதாஸ் குறித்து, ‘’மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும்
தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடு 100 ஆண்டுகளுக்கு மேல்,
நல்ல ஆயுளோடு, மன நிம்மதியோடு, உடல் நலத்தோடு, மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக
அது என்னுடைய கடமையும் கூட. உங்களுக்கு என்மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும்.
அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு சுகர், பிபி எல்லாமே உள்ளது. எனவே நீங்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டும்.
நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன்.
நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். ஏனென்றால் இது நீங்கள்
உருவாக்கிய கட்சி. உங்கள் கனவுகளை நனவாக்குவோம்..’’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால், ராமதாஸ் ஆதரவாளர்கள், ‘’பொதுமேடையில் மன்னிப்பு கேட்கும்
நாடகம் இனி எடுபடாது. ராமதாஸை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு, ராமதாஸ்
ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவி வேண்டும். இல்லையென்றால் கட்சி உடைவதைத் தடுக்க முடியாது.
பா.ம.க. ராமதாஸ் கைக்கு வரும். அப்படி இல்லை என்றால் ராமதாஸ் புதிய கட்சி தொடங்கி இரட்டை
மாங்காய் சின்னம் வாங்குவார்’ என்று கூறுகிறார்கள்.
கட்சி இரண்டு பட்டால் தி.மு.க.வுக்குக் கொண்டாட்டம்.