Share via:

மாநில அரசு ஒருபோதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது,
அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின்
மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கும் சமாச்சாரத்துக்கு
ராகுல் காந்தி வாழ்த்து கூறி இருக்கிறார். இதை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என்று அத்தனை
கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.
இன்று ராகுல்காந்தி, ‘’தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரித்து
காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. மாநிலத்தில் அறிவியல் பூர்வமான
சாதி எண்ணிக்கை மூலம் பெறப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு,
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்காக
சட்டமன்றத்தில் 42% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இது உண்மையில் சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான படியாகும்,
இதன் மூலம் மாநிலத்தில் 50% இடஒதுக்கீடு என்ற சுவரும் இடிக்கப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பு
தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளையும் பகுப்பாய்வு
செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் கொள்கைகள் வகுக்கப்படும். தெலுங்கானா
அரசு இதற்காக ஒரு சுதந்திரமாக செயல்படும் நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. எக்ஸ்ரே
மூலம் மட்டுமே – அதாவது சாதி கணக்கெடுப்பு மூலம் மட்டுமே – பிற்படுத்தப்பட்ட மற்றும்
தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து
கூறி வருகிறேன். தெலுங்கானா வழி காட்டியுள்ளது, இதுதான் முழு நாட்டிற்கும் தேவை. இந்தியாவில்
சாதி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும், நாங்கள் அதைச் செய்து காட்டுவோம்…’’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ், ‘’’தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான
இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டில் இருந்து 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல்
பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை
10% ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பிகாரிலும், தெலுங்கானாவிலும்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான
சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழக அரசுக்கும் தெரியும்;
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு
இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
காரணம்… அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள். சிலரை சில காலம் ஏமாற்றலாம்,
பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது’’ என்று
கண்டிப்பு காட்டியிருக்கிறார்.
ஸ்டாலின் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் ஏமாற்ற
முடியாது அப்பா.