Share via:

தமிழகத்தில் தலித்துகள் வாழவே முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது
என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாதி வெறியால் கொடூரமாக கோகுல்ராஜ்
என்ற இளைஞனை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் பரோலில் வெளிவந்த நேரத்தில், அவரை
கல்லால் அடித்துக் கொல்லாமல் ஹீரோ போன்று வாழ்த்தி கொண்டாடியிருக்கிறார்கள். இது தான்
பெரியார் கனவு கண்ட தமிழகமா..? நடப்பது சமூக நீதி ஆட்சியா? என்ற கேள்விகள் எழுகின்றன.
எந்த ஒரு குற்றவாளி என்றாலும் சிறையில் இருந்து வெளியே வரும்போது,
அறச்சீற்றத்துடன் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆனால், கோகுல்ராஜ் கொலை வழக்கில்
அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும்வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட
ஏ1 குற்றவாளியான யுவராஜ் தன்னுடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக பரோலில் வந்திருக்கிறார்.
இதையொட்டி அவரது சாதி அபிமானிகள் மாவீரன் யுவராஜ் என்று சிலாகித்து ரீல்ஸ் போடும் அளவுக்கு
வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.
கோகுல்ராஜ் என்கிற தலித் இளைஞர் தன்னுடைய சாதியை சார்ந்த பெண்
ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை கும்பலாக கடத்திச்சென்று
சித்திரவதை செய்து, நாக்கை அறுத்து தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்தது யுவராஜ்
தலைமையிலான சாதி வெறி கும்பல்.
இது குறித்துப் பேசும் சமூக ஆர்வர்கள், ‘’ஒரு ஏழைப்பட்ட குடும்பத்தின்
முதல் பட்டதாரி கோகுல்ராஜ். ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை தங்களுடைய சாதி அரிப்பிற்க்காக
சிதைத்து சின்னாபின்னமாக்கிய கேவலமான ஜந்துவிற்கு வெட்கமே இல்லாமல் இங்கு இருக்கிற
சாதிவெறியர்களால் ஃபயர் விட முடிகிறது. சமீபத்தில் தலித் மாணவன் மீது நடத்தப்பட்ட
தாக்குதலாக இருக்கட்டும், சின்னதுரை என்கிற மாணவரை வீடு புகுந்து வெட்டிய சம்பவமாகட்டும்,
தமிழகத்தில் நடக்கிற எல்லா சாதிவெறி தாக்குதல்களுக்கு பின்னும் இந்த யுவராஜ் போன்ற
நபர்களும், அவர்களை சுத்தி கட்டமைக்கப்படும் பிம்பமும் மிக முக்கிய காரணம்.
யுவராஜ் போன்ற குற்றவாளிகள் பரோலில் வெளியே வந்தால் செருப்பால்
அடிக்க வேண்டும், எதிர்ப்பு கோஷம் போட வேண்டும். அப்போதுதான், சாதியின் பெயரால் ஆணவக்கொலை
செய்வதற்கு அஞ்சுவார்கள். இப்படி வெளியில் தலைக்காட்டவே வெட்கித்தலைகுனிய வேண்டிய யுவராஜ்
போன்ற சாதிவெறியர்களெல்லாம் எதையோ சாதித்து கிழித்ததுப்போல் சுற்றுவதெல்லாம் ரொம்பவே
ஓவர்…’’ என்கிறார்கள்.
சாதிய ஒழிப்பில் மற்ற மாநிலங்களை விட ரொம்பவே முன்னேறிவிட்டோம்
என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டுக்கு அவமானம்.