Share via:
டெல்லியில் நடந்த மதுபானக் கொள்முதல் ஊழலால்தான்
அரிந்த் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்று, முதல்வர் பதவியை இழந்து தற்போது ஆட்சியையும்
இழந்திருக்கிறார். அதே வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை அம்பலப்படுத்தவே டாஸ்மாக்
அரசு அலுவலகத்திலும், மதுபான ஆலைகளிலும் 3 நாட்கள் ரெய்டு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துக்குப் பணம் போயிருக்கிறதா
என்று ஆய்வு நடப்பதால் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி மற்றும் செந்தில் பாலாஜிக்கு
சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு
தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை
நேற்று இரவு முடிவுக்கு வந்தது. சென்னையில்
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தமிழ்நாட்டில் உள்ள 4829 டாஸ்மாக் கடைகளின் நிதி பரிவர்த்தனைகள், பார்
உரிமம்/ஏலம் விபரங்கள்,, மதுபான ஆலைகள், மது கொள்முதல், கூடுதல் விலையில் மதுவகைகளை
விற்பது, பார் உரிமையாளர்களின் அரசியல் தொடர்புகள், மனமகிழ் மன்றங்கள்/நட்சத்திர உணவகங்களின்
உரிம விவரங்கள் என அனைத்து தகவலையும் அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து
அள்ளிச் சென்றிருக்கிறது. மேலும் QR code மூலம் தொடங்கப்பட்ட மது விற்பனை பரிவர்த்தனைகளையும்
கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பண
மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது; தற்போது ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியின்
அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மதுபான கொள்முதல்,
விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கியது செந்தில் பாலாஜிக்கு நிச்சயம்
ஆபத்து என்கிறார்கள்.
அதோடு இந்த சோதனையில் பெருமளவு பணம் மற்றும்
ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் என்றும் உதயநிதியின்
ரெட் ஜெயிண்ட் சினிமா நிறுவனத்திற்கு பணம் சென்ற ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆதாரத்தை ஆய்வு செய்து உதயநிதிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக
அமலாக்கத்துறை அதிகார வட்டத்தில் பேசப்படுகிறது. 2026 தேர்தல் களத்தில் தி.மு.க.வின்
மதுபான ஊழல் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பா.ஜ.க.வினர் குஷியாக இருக்கிறார்கள்.