Share via:

என்னை மாணவிகள் அப்பா என்று அழைப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைகிறேன்
என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டு வருகிறார். ஆனால், அவரது ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிபரங்களுடன்
வெளியாகியிருக்கும் தகவல் அதிரவைக்கிறது.
இன்று பா.ம.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு
எதிராக குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரிப்பு: பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற
நாடாக தமிழ்நாட்டை மாற்றி விடக் கூடாது! தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில்
இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட
வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ்
பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394, அதாவது 52.30% அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பெண்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இத்தகையக் குற்றங்களைத் தடுக்க அரசும், காவல்துறையும் தவறியது கண்டிக்கத்தக்கது. போக்சோ
சட்டம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது; அதனால் தான் இந்த
அளவுக்கு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று கூறி, இந்த வேதனையையும் தங்களின் சாதனையாக
மாற்றிக் கொள்ள அரசும், காவல்துறையும் முயலக்கூடாது. அண்மைக்காலங்களாகவே பெண் குழந்தைகள்
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி விட்டது
வேதனையளிக்கிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்பது போன்ற ஏதேனும் ஒரு சாக்குபோக்கு கூறி இந்த மோசமான சூழலை தமிழக அரசு கடந்து சென்று
விடக் கூடாது. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் போதுமான அளவில் உள்ளன;
ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்தாதது தான் பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு முக்கியக்
காரணம் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த சில நாட்களுக்கு
முன் கூறியிருந்ததை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள்
முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது.
அது உண்மை என்பதைத் தான் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது
காட்டுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது மட்டுமே போதுமானதல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்களே நடக்காமல் தடுப்பது தான் சாதனை ஆகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்கள்
மீதான வழக்குகளைத் திறம்பட நடத்தி, அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதன்
மூலம் , இத்தகைய குற்றங்களைச் செய்தால் தண்டிக்கப்படுவது உறுதி என்ற நிலையை ஏற்படுத்த
வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறி விட்டது என்பது தான் இத்தகைய குற்றங்கள்
பெருகுவதற்கு காரணம் ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி
வருவதன் மூலம், தமிழ்நாடு பெண்களும், குழந்தைகளும் வாழத் தகுதியற்ற நாடு என்ற நிலை
ஏற்பட்டு விடக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு
கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தருவதன் மூலமாகவும், குற்றங்களைத் தடுப்பதன் மூலமாகவும்
தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த
வேண்டும்.’’ என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
இதற்கு உடன்பிறப்புகள், ‘’முந்தைய ஆட்சியில் பாலியல் குற்றங்கள்
வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என அனைவரும் மௌனமாக இருந்தார்கள் இப்போது அப்படியில்லை
யார் புகார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது நடவடிக்கை எடுக்கப்படுகிறது விரைவில்
ஒழியும் பாலியல் குற்றங்களும் கள்ளச்சாராய குற்றங்களும் கொடூர (ஆணவ) படுகொலைகளும் குறைந்துவிடும்’’
என்று பதில் தருகிறார்கள்.