Share via:

மூன்று வயதுக் குழந்தை எச்சில் துப்பியதால் பலாத்காரம் நடந்ததாகப்
பேசிய கலெக்டர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட விவகாரத்துக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். கலெக்ட்ரை பிடித்து ஜெயிலில்
போடுங்க என்று கடுமையாக எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர்
மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துக்கொண்டு போலீசாருக்கு
அறிவுரைகளை வழங்கி பேசினர். ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பேசும்போது, “சீர்காழியில் கடந்த
24ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறுவனால் பாலியல் தொல்லைக்கு
உள்ளாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. எனக்கு கிடைத்த அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட
குழந்தை அந்த சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்களில் இரண்டு
பக்கமும் நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை
நடவடிக்கை அவசியம். எனவே, பெற்றோர்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”
என்று பேசியிருந்தார்.
மகாபாரதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஹெச்.ராஜா, அண்ணாமலை ஆகியோரும்
கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இதற்கு கனிமொழி எம்.பி.யும், ‘குழந்தைகளுக்கு எதிராக
இப்படியான கருத்துகளைப் பேசும் நபர்கள் எப்படி தங்களைப் படித்தவர்கள் என்றும், மனிதர்கள்
என்றும் கூறிக்கொள்கிறார்கள். நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்?” என்று
கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு பதிலாக,
புதிய மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை நியமித்து
தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணி ஓய்வு
பெறுவதற்கு (மே) மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தற்போது எங்கு, எந்தத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்
என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கொடிய மிருகத்தின்
மீது கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடாமல் குற்றச் செயலில்
ஈடுபட்ட அந்த கொடியவனுக்கு ஆதரவாக பேசுவதும், ஒரு பாலியல் வன்கொடுமைக்கு நியாயம் கற்பிப்பதும்
தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் பணியா? திமுக ஆட்சியில் மட்டும்தான் பாதிக்கப்பட்ட குழந்தைகளை,பெண்களை
குறை கூறும் அவலம் நடக்கிறது. மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியை பணியிடமாற்றம் செய்தது
சரியல்ல.அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும். போஸ்கோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.