Share via:
பாட்டாளிகள் மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரிக்கிறதே
தவிர, குறைவதாகத் தெரியவில்லை. அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வீசிவரும்
நிலையில் அன்புமணியோ, ‘’கட்சியில் நிலவும் குழப்பத்திற்கான காரணத்தை வெளியே சொல்ல முடியவில்லை’’
என்று கூறியிருக்கிறார். அதேநேரம், இந்த பிளவுக்குக் காரணம் திமுக என்று அரிய கண்டுபிடிப்பையும்
வெளியிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் அன்புமணியின் பேச்சை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் டாக்டர்
ராமதாஸ் தொடர்ந்து நியமனம் செய்துவருகிறார். ஏற்கெனவே 12 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட
தலைவர்கள் நியமித்து இருந்த நிலையில் மயிலாடுதுறை, காஞ்சிபுரம் கிழக்கு, திருப்பத்தூர்,
விழுப்புரம், கடலூர், தேனி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் தென்சென்னை
ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு மேலும் சில நியமனங்களை வெளியிட்டார்.
அதன்படி இப்போது 73 மாவட்ட செயலாளர்களையும், 57 மாவட்ட தலைவர்களையும்
ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார். மேலும் பாமக மாநில மாணவர் சங்க செயலாளராக சென்னை
ஸ்ரீராம், மாநில இளைஞர் சங்க செயலாளராக பரந்தூர் சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் என்று கருதப்படும் செளமியா
இப்போது கோயில் கோயிலாகச் சென்று சிறப்பு பூஜை செய்து வருகிறார். ஏற்கனவே திண்டிவனம்
ராஜாங்குளம் ஆஞ்சநேயர், ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோயிலுக்கு மகள்களுடன் சென்று
வழிபட்ட நிலையில் நேற்று மயிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமிகள் கோயிலுக்கு
சென்றார். அங்கு சிறப்பு தரிசனம் செய்தார்.
இப்படி கோயில் தரிசனம் செய்வதற்குப் பதிலாக ராமதாஸை சந்தித்துப்
பேசினால் நல்லது.