Share via:
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள்
மாநாடு நடைபெற உள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டை
அரசியலாக்கும் வகையில் பிரமாண்டப்படுத்தி வருகிறார்கள். பெரும் அளவுக்கு பணம் செலவழித்து
தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. சிறப்பு ரயில்
விடப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவன் திருநீறு அழித்ததை வைத்து பெரும் பஞ்சாயத்து
நடக்கிறது.
முருக பக்தர்கள் மாநாடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் விளையாட்டு.
இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மதுரையில் பதட்டத்தை
உருவாக்கவே இந்த மாநாடு நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மத நல்லிணக்க மக்கள்
கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன், இயக்குனர்
அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்ற திருமாவளவனுக்கு
அர்ச்சகர்கள் மாலை அணிவித்து திருநீறு பூசினர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்ட போது
அதனை வணங்கினார். அவருக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. அப்போது தொண்டர்கள்
செல்ஃபி எடுக்க வந்ததால் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு போட்டோவுக்கு
போஸ் கொடுத்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பெரும் வைரலானது.
இதையடுத்து மத்திய அமைச்சர் எல்.முருகன், “திருமாவளவன் நெற்றியில்
பூசிய விபூதியை கோவில் வளாகத்திற்குள்ளேயே அழிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முருகனின்
பிரசாதமான விபூதி அழகை குறைக்கும் பொருளாக இவருக்கு தெரிகிறது. இந்துக்களின் எழுச்சியைப்
பார்த்து பயந்து, இந்து மத நம்பிக்கையில் ஆர்வமுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.
இந்த கபட நாடகத்திற்காகத் தான் திருமாவளவன் திருப்பரங்குன்றம் சென்றுள்ளார்” என்று
விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து மதுரையில் விளக்கம் அளித்த திருமாவளவன், “திருநீறை
நெற்றியில் வைத்துக்கொண்டுதான் வெளியில் வந்தேன். சுமார் அரை மணி நேரம் வரை திருநீறு
வைத்திருந்தேன். அவ்வளவு நேரம் இருந்ததை நீங்கள் யாரும் பார்க்கவில்லையா? நாள் முழுவதும்
திருநீறை நான் வைத்துக்கொண்டு இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்தனை நேரம் நெற்றியில் வைத்திருந்த திருநீறை மேலும் சில நிமிடங்கள்
வைத்திருந்தால் என்ன என்பது தான் கேள்வி. மதுரையில் முருகன் மாநாட்டையொட்டி எந்த அசம்பாவிதமும்
நடந்துவிடக் கூடாது. தமிழகமும் கலவர பூமியாக மாறிவிடக் கூடாது.