Share via:
எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் அதனை எதிர்கொள்வோம்.
கைதுக்கு நான் அஞ்சுகிற ஆளா..? விசாரணைக்கு ஆஜராக நான் பயப்படவில்லை. எல்லா வழக்குகளையும்
ஒரே இடத்திற்கு மாற்றிக்கொள்வோம் என்று சீமான் பேசிய விவகாரம் வைரலாகிவருகிறது.
சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தொடர்ந்து
தெரிவித்து வந்தார். அவரின் பேச்சை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இவருக்கு கடும்
கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சீமான்
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு
ஆஜராக வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார்
சார்பில் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில்
3-வது முறை சம்மன் அளிக்க போலீசார் அவரது வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேபோல் வடலூரில்
ஏற்கனவே பதியப்பட்ட வழக்கில் சீமான் ஆஜராகவில்லை. எனவே வருகிற 20-ந் தேதி நேரில் ஆஜராகும்
படி ராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர் போலீசார் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு
சம்மன் அளிக்க வந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் பரவியதால்
அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஈரோடு தேர்தல் பரப்புரையில் வெடிகுண்டு இருக்கிறது என பேசிய
விவகாரம் தொடர்பாகவும் சீமான் வருகிற 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக காவல் துறை சார்பில்
சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் சீமான்
பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’பெரியார் மற்றும் திராவிடம் குறித்த விமர்சனமும்
எதிர்ப்பும் என்பது தமிழர்களின் அடையாளத்தை திராவிடம் என சுருக்கி தமிழையும் தமிழர்களையும்
கொச்சைப்படுத்திய பெரியார் என்ற ஒற்றை நபர் மீது எழுதுவதும், அநாகரிக அரசியலின் தொடக்கம்
கருணாநிதி அவர்கள்தான். என்னை அவர் தான் சிறைக்கு அனுப்பி எனக்கு எதையும் தாங்கிய வலிமையைக்
கொடுத்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் இப்போது படிக்கும் நேரம் குறைவாக இருக்கிறது. ஆகவே, சிறைக்கு
அனுப்ப முடிந்தால் அனுப்பட்டும். நான் இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் இல்லை, சோர்வடையப்
போவதும் இல்லை’’ என்று சவால் விட்டிருக்கிறார்.