Share via:
ஓநாடு, வெள்ளாடு ஒன்றாக இருக்க முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி
கேள்வி எழுப்பியிருப்பதற்குப் பின்னால் அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கும் ரகசியம்
இருப்பதாக அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எழுதிய கடிதத்தில்,
’’தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில்
எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்;
மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக
மறந்துவிட முடியாது.
அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு,
ஜெயலலிதா அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன்,
திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.
இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட
திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக்
கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து
கொண்டிருக்கிறது.
பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும்,
தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற
நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும்
கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு
சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப்
பூட்டு போடப்படுகிறது.
இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது.
பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த
திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும்
ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?
முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை ஒரு காலத்திலும்
கட்சிக்குள் சேர்க்க முடியாது என்பதையே எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியிருப்பதாகச்
சொல்லும் அ.தி.மு.க.வினர் இதற்கு பின்னே பா.ம.க.வின் கூட்டணிக் கணக்கு இருக்கிறது என்கிறார்கள்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.மணி சந்தித்து பத்திரிகை கொடுத்தார். அப்போது
அன்புமணியை மீண்டும் எம்.பி. ஆக்குவதற்கு உதவ வேண்டும் என்றும் அப்படி உதவினால் சட்டமன்றக்
கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டது போலவே தெரிகிறது. அதனாலே
இப்போது வேறு யாருடைய கூட்டணியும் வேண்டாம் என்கிறார். கடந்த காலத்தில் அன்புமணி எடப்பாடி
பழனிசாமியை எத்தனை கேவலமாகப் பேசினார் என்பதை மறந்துவிடக் கூடாது. கூட்டணி வைத்தால்
அன்புமணிக்கும் பா.ம.க.வுக்கும் லாபமாக இருக்குமே தவிர, அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்காது.
அதனால் எம்.பி. பதவியை அன்புமணிக்குக் கொடுத்துடாதீங்க’’ என்று கதறுகிறார்கள்.