Share via:
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு
வரவேண்டிய சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசு மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க
நேரிடும் எனவும், திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகவும்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி வருகிறார்.
அதேநேரம், உலகின் மூத்த மொழியான தமிழை பிரதமர் மோடி போற்றுவதோடு,
உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட
பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில்
இயங்கும் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லை என்ற
தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படையில், கேந்திரியா
வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தி மொழியை பயிற்றுவிக்க அந்த 34 பள்ளிகளில், 52 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், உலகின்
மிகவும் பழமையான மொழி, செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி, தமிழ்நாட்டின் ஆதி மொழி, தமிழர்களின்
தாய்மொழி என போற்றப்படும், தமிழ் மொழியை பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளிகளில்
ஒரு ஆசியர் கூட இல்லை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை
இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை
இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 9 மற்றும்
10ம் வகுப்பு முதல் ஆங்கிலத்துடன் சேர்ந்து இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்து
ஏதேனும் ஒரு மொழியை தேர்வுசெய்து பயிலலாம்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பாஜக ஆட்சியில் தமிழ் மொழிக்கு
அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்
அளிப்பதாகவும் அண்ணாமலை மார்தட்டுகிறார். ஆனால்,
ஒரு தமிழ் ஆசிரியரை கூட நியமிக்காமல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எப்படி தாய்மொழி
தமிழ் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது?’’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பதில் சொல்லுங்க அண்ணாமலை