Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/GjbkhM0XwAA_gfG-1024x662.jpg)
வரும் சட்டமன்றத்
தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பும் நிலையில் பா.ஜ.கவுடன்
தொடரவே அன்புமணி ஆசைப்படுகிறார். அதற்கு முன்னோட்டமாகவே ஜாதிக்கட்சிகளை எல்லாம் வளைத்துப்
போட்டிருக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ளது.
நாடு முழுக்க மதம்
ரீதியாக மக்களை ஒன்று திரட்டி, மதக்கலவரத்தைத் தூண்டி ஆட்சிக்கு வருவது பா.ஜ.க. ஸ்டைல்.
அது தமிழகத்தில் எடுபடவில்லை என்று ஜாதி ரீதியாக ஒன்று திரட்டுவதற்கு முயற்சி செய்தது.
டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோரைக் கொண்டு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி
அடைந்தன். இந்நிலையில் பா.ஜ.க.வுக்காக ஜாதிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை அன்புமணி
ராமதாஸ் மேற்கொள்வதாக அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.
இதற்கு முன்னதாகவே
சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று அத்தனை சாதித் தலைவர்களையும் அன்புமணி ஒன்று சேர்க்க
முயற்சி எடுத்திருக்கிறார். அந்த வகையில் சென்னை – அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்ற
“தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்”
குறித்து கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார் அன்புமணி.
அன்புமணியின் அழைப்பை
ஏற்று புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர்
ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி பொதுச் செயலாளர் கோ.சமரசம், தென்னிந்திய ஃபார்வர்ட்
பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர்
சி.ஆறுமுகம், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.எஸ்.செல்வக்குமார், வெள்ளாளர் முன்னேற்ற
கழகம் தலைவர் சரவணன், தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ், யாதவர் மகா சபை
செயலாளர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணை பொதுச்செயலாளர் தமிழரசன்,
நாடார் மகாஜன சங்கம் துணை பொதுச்செயலாளர் மாரிமுத்து, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை
தலைவர் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
முக்கியமான சாதிக்
கட்சித் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஆகவே, கூட்டத்தைப் பெரிதாகக் காட்டி பா.ஜ.க.விடம்
பேரம் பேச நினைத்த அன்புமணிக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது.