Share via:

வரயிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில்
இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., சட்டமன்ற எதிர்க்கட்சியான
அ.தி.மு.க., புதிதாக அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் ஆகிய மூவரும் மிகுந்த
உறுதியுடன் இருக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் மூவரும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றும்
எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதே
அரசியல் பரபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவை விஜய்க்கு
வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருக்கிறார். அந்த தைரியத்தினாலே பட்ஜெட்டில்
வழக்கத்தை விட கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்திருக்கிறார் என்று சவுக்கு சங்கர்
உள்ளிட்ட சிலர் சமூகவலைதளங்களில் பேசிவருகிறார்கள்.
அதேநேரம் விஜய் மன்ற ரசிகர்களில் பெரும்பாலோருக்கு எடப்பாடி பழனிசாமியுடன்
கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லை என்று தெரியவந்துள்ளது. இது குறித்த் சமூக வலைதளத்தில்
அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகக்கூடாது என்று விஜய்க்கு வேண்டுகோள் வைக்கிறார்கள். இது
குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’அதிமுக இப்போது வலுவாக இல்லை. அதிமுகவின் கையில்
இருந்த முக்குலத்தோர் ஓட்டுகள் பிரிந்து திமுகவிடம் சென்றுவிட்டது.
இப்போது விஜய் என்ன கேட்டாலும் எடப்பாடி பழனிசாமி சம்மதம் சொல்வார்.
அதாவது, கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் பதவி, 80 சீட் எல்லாம் தரலாம். ஏனென்றால் விஜய்
முகத்தைக் காட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி ஜெயிக்க முடியும். அவர் முதல்வர் ஆக
வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வா.
ஆனால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கவா விஜய் 30 ஆண்டுகள்
சினிமா தொழில், பணம் எல்லாத்தையும் விட்டுவிட்டு தனியாக கட்சி தொடங்கி வேலை செய்து
வருகிறார்? இதற்கு எதற்கு கட்சி? அதிமுகவிலே சேர்ந்துவிடலாமே? வரும்போதே இன்னொருவரை
ஆதரித்து அவரின் கீழ் சென்றால் முதன்மை சக்தியாக வர முடியாது, மக்கள் ஏற்கமாட்டார்கள்
என்பது விஜய்க்கு நன்றாகவே தெரியும்.
இப்போது விஜய் கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள்.
இதுவே ஏறத்தாழ 20% விஜய் இனி சுற்றுப்பயணம், பிரச்சாரம் எல்லாம் செய்தால் இன்னும் கூடும்.
விஜய் என்ன பேசினாலும் மீடியா வெளிச்சம் போட்டு காட்டும். எங்கு திரும்பினாலும் விஜய்
பற்றியே செய்தியே நிரம்பி இருக்கும். அதனால் 2026 தேர்தலில் தனித்து நின்று விஜய் வெற்றி
பெறுவது நிச்சயம். ஒரு வேளை தவறினாலும் எதிர்க்கட்சித் தலைவராவது நிச்சயம். அதுவே,
ஆளும் கட்சியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார். அது போதும் தலைவா… கூட்டணி வேண்டவே
வேண்டாம்’’ என்கிறார்கள்.