Share via:
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளிகள் என்று சொல்லப்படும் நபர்களுக்கு
குற்றப்பத்திரிகையே வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொந்தளிப்பு
காட்டியிருக்கிறார்கள்.
தாங்கள் குடிக்கும் தண்ணீரில் பட்டியலின மக்களே எப்படி மலத்தைக்
கலப்பார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கேள்வி
எழுப்பிவருகிறார்கள். இதற்கு முரசொலியில், ‘’புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராம
குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும் இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள்
சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார
நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க
நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் முதலில் செய்திகள் வெளியானது.
இதில் எதுவும் உண்மை இல்லை. மலம் கலந்து விட்டதாக பொய்ச் செய்தி
பரப்பப்பட்டு, அதன்பிறகு மலம் கலக்கப்பட்டது என்பதை காவல் துறையின் விசாரணை உறுதி செய்துள்ளது.
வெள்ளானூர் காவல் நிலையத்தில் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த
வழக்கானது 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு
மாற்றப்பட்டது. இந்த விசாரணையை மிகக் கவனமாகக் கையாண்டது காவல் துறை.
சாதி வன்மத்துடன் இச்செயல் செய்யப்பட்டதா? அல்லது அரசியல் மோதலா?
தனிப்பட்ட பழிவாங்கும் முயற்சியா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணையானது நடைபெற்றது.
விசாரணையின் முடிவை காவல் துறை வெளியிட்ட அறிக்கை தெளிவாகச் சொல்கிறது.
“சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று
வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக
முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக்
கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின்
தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்குப்
பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது
காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது” என்கிறது காவல் துறையின்
அறிக்கை.
இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன்
மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும்
அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு
மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி
செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன்
உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு
அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு
செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன்
ஆகிய மூவர் மீதும் 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளிடம் காவல் துறை விசாரணை நடத்தி
இருக்கிறது. 196 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 87 டவர் லொகேஷன் ஆய்வு
செய்யப்பட்டுள்ளது. 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இந்த போன்களில்
இருந்து அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மீட்கப்பட்டன. மேல் நிலை நீர்த் தேக்கத்
தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அங்கிருந்தபடி அவர்கள் பேசிய செல்போன்
எண்கள் என அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றவர்களிடம்
பேசிய ஆடியோக்கள் ஆதாரமாக உள்ளது…’’ என்று கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்கும் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன், ’புதுக்கோட்டை மாவட்டநீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட அறிக்கை நகல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமலேயே நீதிமன்றத்தில்
மட்டும் தாக்கல் செய்யப்பட்டது தவறு என்றும் தானே முன்வந்து அரசுதரப்பு விலையில்லாமல்
வழங்கியிருக்க வேண்டியநிலையில் அதை விண்ணப்பித்த பிறகும் வழங்காத நிலையில் எப்படி எங்கள்
தரப்பு வாதத்தை முன்வைக்க முடியும். எனவே, அறிக்கை எங்களுக்கு வழங்கப்பட்ட பிறகே எங்கள்
தரப்பு கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நியாயமான வாதம்.