Share via:

12
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம்
45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில்
பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் கும்பமேளாவுக்கான
நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி,
நடப்பு கும்பமேளாவில் புனித நீராட 6 நாட்கள் மிகவும் புனிதமானவை என்றாலும் ஜனவரி
29 மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித
நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி எக்கச்சக்க
நபர்கள் பலியாகி இருப்பதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலம்
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் உள்ள மூன்று
தனித்தனி பகுதிகளில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நதிகளின் கரையில் அமர்ந்திருந்த மக்கள் குழுக்களாக முன்னேறிச் சென்றதாக கூறப்படுகிறது. திடீரென எக்கச்சக்க
நெரிசல் காரணமாக ஆற்றங்கரையில் பெரும் குழப்பம் நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்களின்
உடைமைகள், உடைகள், காலணிகள், போர்வைகள் மற்றும் பைகள் சிதறிக்கிடந்தன. அப்புறப்படுத்தப்பட்ட
பொருட்களுக்கு மத்தியில் சில உடல்கள் இருந்ததையும் பார்க்க முடிகிறது.
சில இடங்களில் தடுப்புகளை
மீறி மக்கள் சென்றதே நெரிசலுக்கு காரணம் என கும்பமேளா ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகள்
தெரிவிக்கிறார்கள் அதேநேரம், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பலரும்
குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும் 70க்கும்
மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை
மிகவும் அதிகம் என்று மக்கள் சொல்கிறார்கள்.
கும்பமேளாவில் ஏற்பட்ட
கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், விஐபிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது,
நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவைதான் காரணம் என காங்கிரஸ்
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு
மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல்
உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல்
தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்களுக்குப்
பிறகு, இப்போது யாரும் அயோத்திக்கும் புனித நீராடலுக்கும் வர வேண்டாம் என்று வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் படையெடுக்கிறார்கள் என்பது அச்சத்தைத் தூண்டி
வருகிறது.
இந்த மரணங்களுக்குப்
பொறுப்பு ஏற்கப்போவது யார் என்பது தான் கேள்வி.