நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில்‌ தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்ப தி.மு.க. முடிவு செய்திருக்கிறது.

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ஆளுநருக்கு நடத்தை விதிகளை வகுக்க வேண்டும். மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும் மாநில அரசின்-அதாவது மாநிலத்து மக்களின் வரிப்பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர் – ஆளுநர் மாளிகையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர் போல் அரசியல் செய்வார். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து “துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகத்தை” உருவாக்குவார். ஆனால் அதே பல்கலைக்கழகங்களில் பா.ஜ.க. அரசியல் பிரசங்கம் செய்வார். அக்கப்போர் அரசியல் மட்டுமே ஆளுநரின் அஜெண்டாவாக இருக்கிறது.

“ஆளுநரை நியமிப்பதற்குப் பதில் – ஏன் தேர்ந்தெடுக்க கூடாது” என அரசியல் நிர்ணய சபையில் விவாதித்த போது “அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடுவார். அப்படி அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனநாயகத்தை அடிமைப்படுத்துவது போலாகிவிடும் (amount to surrender of democracy)” என சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டனர். நியமிக்கப்பட்ட ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அதைத்தான் அடாவடியாகச் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியிலோ, தமிழ்நாட்டு மக்களின் நலனிலோ, தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலோ அவரே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திலோ நம்பிக்கை துளிகூட இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஆர்வம் வெகுஜன விரோத வலதுசாரி அரசியல் மட்டும் தான். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

“அரசின் கொள்கை முடிவுகளை நிை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து துணை நிற்க வேண்டிய அரசியலுக்கு அப்பாற்பட்டவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்” என அரசியல் நிரணய சபை எதிர்பார்த்தது. ஆனால் ஆளுநர் ரவி நியமனத்தில் அது தவிடுபொடியாகிப் போனது என்பதை இந்த எம்.பி.க்கள் கூட்டம் மிகவும் வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறது.

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை- அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர் ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நன்னடத்தை விதிகளை (Code of Conduct) உருவாக்கிட வேண்டும் என்றும், மாநில அரசின் கோப்புகள், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் ஆகியவற்றில் கையெழுத்திட ஆளுநருக்கு காலநிர்ணயம் (Time Frame) செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அந்த கோரிக்கையையும் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இந்த எம்.பி.க்கள் கூட்டம் தீர்மானிக்கிறது

 இதுதவிர, மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசை பணிய வைத்து- டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர் அவர்களுக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது” என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளத்.

கூட்டாட்சி தத்துவம் மாநில கல்வி உரிமை உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி கழக மாணவரணி – கழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்ப் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link