Share via:
இம்மாத இறுதிக்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் நடைபெற உள்ளது.
இந்த பதவிக்கு தமிழிசை செளந்தராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர்
கடுமையாக போராடி வரும் நிலையில், மீண்டும் அண்ணாமலையை நியமிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தமிழக பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர்கள் நியமனம் நடைபெற்றது.
போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருமே போட்டியின்றி நியமனம்
செய்யப்பட்டுவிட்டார்கள். அடுத்தகட்டமாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேர்வு நடக்கிறது.
இந்த பதவிக்கு கடுமையான போட்டி இருந்தாலும், ஒருமனதாக தேர்வு செய்யப்பட
வேண்டும் என்பதே மேலிட விருப்பமாக இருக்கிறது. வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி
வைப்பது முக்கியம் என்பதால் அண்ணாமலை தேர்வு செய்யப்பட மாட்டார் என்றே கருதப்பட்டது.
ஆனால், பா.ஜ.க.வில் அண்ணாமலை தேர்வு செய்யப்படவில்லை என்றால் பல்வேறு குழப்பம் உருவாக
வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.
மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுக்கு போதிய
முக்கியத்துவம் கிடைக்கப்போவதில்லை, ஆட்சிக்கும் அ.தி.மு.க. வரப்போவதில்லை என்ற கருத்து
கூறப்பட்டுள்ளது. ஆகவே, பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலையே தேர்வாகிறார் என பாஜக
வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க.வை வளர்ப்பதே முக்கியம் என்று
கருதப்படுவதால் இந்த முடிவு என்கிறார்கள். இன்னமும் இரண்டு நாட்களில் இறுதி முடிவு
அறிவிக்கப்படும் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம், பதவியை வாங்காமல் விடுவதில்லை என்று
தமிழிசையும், வானதியும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நயினாரும் அவரது பாணியில்
கடும் முயற்சியில் இருக்கிறார். எனவே, தமிழக பா.ஜ.க. தடுமாறிக்கொண்டு இருக்கிறது.