Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/MergedImages-2025-02-08T123134.585.jpg)
வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில்,
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், மாணவியின்
தாயார் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு
ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் பெரும் கலவரமாக
மாறியது. மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று அந்த தனியார் பள்ளியை
சூறையாடினர். பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள்
மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அதையடுத்து மாணவியின் மரணம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின்
பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சின்னசேலம்
போலீஸார், தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், வேதியியல் ஆசிரியர், கணித
ஆசிரியர் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி
போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘’ஜிப்மர் மருத்துவக்
குழுவினரின் ஆய்வறிக்கையின்படி, அந்த மாணவி கொலையோ, பாலியல் வன்கொடுமையோ செய்யப்படவில்லை
என்பது உறுதியாகியிருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர்
மதுரையிலும், இரண்டு ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருக்க வேண்டும். மாணவ, மாணவிகளை
படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம்.
மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது
துரதிஷ்டவசமானது. படிப்பில் சிக்கல்களைச் சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது
வருத்தமளிக்கிறது. ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக எந்த ஆதாரங்களும்
இல்லை. உயிரிழந்த மாணவியின் தற்கொலைக் குறிப்பில்கூட, ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக
எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக
சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொருந்தாது” என்று கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில்தான் கலவர வழக்குத் தொடர்பாக மொத்தம் 916 பேர் மீது,
24,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கள்ளக்குறிச்சி
நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் 53 பேர் இளம் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் அவர்களுக்கு மட்டும் முதல் கட்ட விசாரணை பிப்ரவரி 21-ம் தேதி விழுப்புரம் சிறார்
நீதிமன்றத்தில் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
அதேபோல காவல்துறை பாதுகாப்பிற்காக சேலத்தில் இருந்து வந்த வாகனங்களை
அடித்து உடைத்ததாக சுமார் 120 பேரும், பள்ளி வளாகத்தில் இருந்த பசு மாடுகளை திருடிச்
சென்றதாக 5 பேரும் இணைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக
உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியும், இரண்டாவது குற்றவாளியாக வி.சி.க-வின் கடலூர்
மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிடமணியும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளி, இந்த வழக்கிலும்
பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளி என்றால் போலீஸ் ஆட்சி நடக்கிறதா என்று சமூக ஆர்வலர்கள்
கேள்வி எழுப்புகிறார்கள்.