Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/Gjjssu8WoAAlXjn.jpg)
மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும்
ஆயுதங்களாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை இயங்கிவரும் நிலையில்,
தேர்தல் ஆணையமும் மோடிக்கு ஆதரவாகவே இயங்குகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை
இலை விசாரணையை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியை
அதிர வைத்திருக்கிறது.
அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில்
திரு கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன்,
மதுரை காந்தி ஆகியோரது மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இந்த விசாரணைக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை ஆணை பெற்றார்.
அந்த தடை ஆணையை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அதிமுக உட்கட்சி
விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்” என தீர்ப்பளித்துள்ளது சென்னை
உயர்நீதிமன்றம். தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை
நிராகரிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்கு
பா.ஜ.க. படு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கைப்பாவையாகவே செயல்படும் என்பதால் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு
சம்மதிக்கவில்லை என்றால் வரும் தேர்தலில் இரட்டை இலை முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள்
உண்டு என்று அஞ்சுகிறார்கள்.
அதேநேரம், செங்கோட்டையன் தலைமையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா
ஆகியோரை இணைத்து அதிமுக முதல் அணி பாஜக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாம்.
இந்த அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கட்சியில்
அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் இன்று ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்
என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ‘’இந்த தீர்ப்பில் மக்கள்
பிரதிநித்துவ சட்டத்தின் படி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது. அதை எடுத்து படித்துப்பார்த்தாலே தேர்தல் ஆணையம் எடப்பாடியாருக்கு
ஆதரவாகத்தான் முடிவெடுக்க முடியும். அதேநேரம் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஒரு மாவட்டச்
செயலாளர் கூட செல்ல மாட்டார்’’ என்றும் சொல்லிவருகிறார்கள்.