Share via:
அத்திகடவு அவிநாசி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை
என்று நேரடியாக எடப்பாடி பழனிசாமியை குற்றம் சொல்லும் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய செங்கோட்டையன், ‘’அத்திகடவு அவிநாசி திட்டம்
புரட்சிதலைவி அம்மா கொண்டுவந்தது அவரின் படம் இல்லை என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை,
இதை புறக்கணிப்பு என்று கூறக்கூடாது. இந்த திட்டத்துக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே
காரணம்’’ என்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
தன்னைவிட ரொம்பவும் ஜூனியரான எடப்பாடி முதல்வர் ஆனபோது கூட கட்சிக்கு
எந்த வகையிலும் இடைஞ்சல் கொடுக்காமல் ஒத்துழைத்தவர் செங்கோட்டையன். அவர் இன்று ஒரு
பேனரில் ஜெ, எம்ஜிஆர் போட்டோ இல்லை என்று விழாவை புறக்கணிப்பதும் வெளிப்படையாகப் பேட்டி
கொடுப்பதும் அ.தி.மு.க.வை உடைக்கும் வேலை என்று பலரும் கருதுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், ‘’அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை
நிறைவேற்றியதற்காக விவசாய சங்கங்களால் நடத்தப்பட்ட பாராட்டு விழா நிகழ்ச்சியில் மேடையில்
அனைத்துக்கட்சி தலைவர்களும் அமர்ந்திருந்தனர். அங்கே திட்டத்தில் தனது ஆட்சியில் அமல்படுத்திய
காரணத்தால் எடப்பாடியாருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதாவது அனைத்துக்கட்சியினரும்
அமர்ந்திருக்கும், அழைத்திருக்கின்ற விவசாய சங்கத்தினரின் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட
அரசியல் கட்சியின் தலைவர்களின் படத்தை மட்டும் எப்படி வைக்க முடியும் ?
எடப்பாடியார் பேசும் போது, ‘இது கட்சி சார்பற்ற பொது நிகழ்ச்சி
அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ளும் போது மாட்டு வண்டி ஊர்வலத்தில் இரட்டை இலை வெற்றி
சின்னத்தை காண்பிக்க வேண்டுமா என யோசித்தேன் கூட இருந்தவர்கள் அதிமுக கட்சி செய்ததால்
காண்பியுங்கள் தவறில்லை என்று சொன்னதால் காண்பித்தேன்’ என்று சொன்னார். அதே போல் மேடையில்
பேசும் போது, ‘அம்மா தான் இந்த திட்டத்திற்கு ஆரம்பப்புள்ளி 3 கோடி ரூபாய் நிதி அளித்து
தனக்கு உத்வேகத்தை கொடுத்தார்’ என தெளிவாக குறிப்பிட்டார்.
அதேநேரம், இது பொதுவான விழா என்று சொன்னால் பச்சைப் பிள்ளைகூட
நம்பாது என்று எதிர்க்கட்சிகள் செங்கோட்டையனுக்கு ஆதரவு காட்டி வருகிறார்கள். என்ன
பஞ்சாயத்துன்னு சீக்கிரம் பேசித் தீர்த்துடுங்கப்பா.