Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/MergedImages-2025-02-13T122629.007.jpg)
தமிழகத்தில் வரும் ஜூலை 24ம் தேதி 6 மாநிலங்களவை எம்.பி.க்களின்
பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனும் அ.தி.மு.க. சார்பில்
பிரேமலதாவும் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.யாக இருக்கும்
வைகோவுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்றும் தெரியவருகிறது.
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் எம்.பி.க்களாக
தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின்
பதவிக் காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடைகிறது. அந்த வகையில் 2025, ஜூலை 24 ஆம் தேதியுடன்
6 எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் எம்.பி. ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை
பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக
ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்
காலம் நிறைவடைகிறது. தற்போது தமிழக சட்டப் பேரவையில் கட்சிகள் சார்பில் உள்ள உறுப்பினர்கள்
எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் ஒருவரும்
உறுதியாக எம்.பி.யாக முடியும். ஒர் எம்.பி.க்கு போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் திமுக சார்பாக கடந்த முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட
வழக்கறிஞர் வில்சன், அப்துல்லாவுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று
தெரிகிறது. சண்முகம், வைகோ ஆகியோரை தி.மு.க. மீண்டும் நிறுத்தப்போவதில்லை. அதேநேரம்,
கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள்
நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எம்.பி. பதவி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி சார்பில் கடந்த முறை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
தற்போது பாஜக கூட்டணியில் இருப்பதால் அவருக்குப் பதிலாக இப்போது கூட்டணிக்கு வந்திருக்கும்
பிரேமலதாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஓப்பந்தம் நாடாளுமன்றத்
தேர்தல் ஒப்பந்த நேரத்திலேயே போடப்பட்டுள்ளதாக பிரேமலதா இப்போது கோரிக்கை வைத்திருக்கிறார்.
இரண்டாவது நபரை தேர்வு செய்வதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் உதவியும் தேவைப்படும்.
அவர்களை எடப்பாடி கேட்பாரா அல்லது தி.மு.க.வே வைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுக்கொடுப்பாரா
என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.