Share via:
த.வெ.க.வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் நடிகர் விஜய்யை மீண்டும்
நேரில் சந்திக்கலாம் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். சமீபத்தில்
நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விழாவில் ஒரு முக்கியப் பிரபலம் கட்சியில் சேர்வதற்கு விருப்பம் காட்டியதாகவும்,
அதற்கு விஜய் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க.வின்
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
அதன் வகையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமனம் நடைபெற்று வருகிறது.
விஜய் கட்சியின் இரண்டாமண்டு தொடக்க விழா முதல் மாநாட்டை போல பிரமாண்டமாக நடைபெறும்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சொகுசு விடுதியில் நடத்த
திட்டமிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டுதொடக்க விழா,
சென்னை அடுத்த மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நாளை காலை
7.45 மணிக்கு விழா தொடங்குகிறது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள்,
துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் என். அனந்த், தேர்தல் வியூக
பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன்
முதன்முதலாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகத்
தெரிகிறது.
இந்த கூட்டத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமி கலந்துகொள்ள விருப்பம்
தெரிவித்தாலும் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள். அதேபோல் காளியம்மாள், மருது
அழகுராஜ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். இதற்கும்
விஜய் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
இந்த கூட்டத்தில் கூட்டணி முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால் திறந்த
வெளிக் கூட்டமாக இல்லாமல் கலந்துரையாடலாக நடைபெற உள்ளது என்கிறார்கள். இதற்காக இப்போதே
ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் பேச்சு லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்படும்
என்று சொல்லப்படுகிறது. அப்போது சில கட்சிகளுக்கு நேரடியாக கூட்டணி அழைப்பு விடப்படும்
என்று சொல்லப்படுகிறது.