Share via:
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட
வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் போலீஸ் காவலில் உள்ள நிலையில் இன்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக வந்திருக்கும்
தகவலை அடுத்து உயிருக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள
ஞானசேகரனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்
அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஞானசேகரனை ரகசிய
இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரனால் மேலும் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக
தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ஆகவே, அந்த 3 பெண்கள் யார்? என்று ஞானசேகரனிடம்
விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இன்னொருவருக்கு
தொடர்பு இருப்பதாகவும், அந்த சார் யார்? என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள்
கேட்கப்பட்டன. அதுதொடர்பாகவும் ஞானசேகரனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக எஃப்ஐஆர் வெளியானது எப்படி? என அபிராமபுரம்
மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் தலைமைக் காவலரிடமும் சிறப்பு புலனாய்வு
குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு, ஞானசேகனின் செல்போனில் பதிவான ஆபாச
வீடியோக்களில் உள்ள பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது.
இந்த நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அதற்கு மருத்துவமனையில்
சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்து
ஏற்பட்டால் வழக்கு விசாரணையில் குழப்பம் வந்துவிடும் அதற்கான முயற்சி நடக்கிறதா என்ற
கேள்வியும் எழுகிறது.