Share via:
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது
எல்லோரும் அறிந்தது தான். ஆனால், அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தென்படுகிறது.
அதாவது தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வதைக் கண்டு பா.ஜ.க.வினர் அதிர்ந்து நிற்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தையொட்டி தமிழகத்தில் பெண்களுக்குப்
பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். யார் அந்த சார்
என்று அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். நடிகர் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து
புகார் கடிதம் கொடுத்தார். ஆனால், இவர்கள் அனைவரும் சொல்வது பொய் என்பது போன்று சமீபத்தில்
பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அதாவது, ‘’தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது.
அதனாலே வடகிழக்கு மாநிலங்களில் இருந்தெல்லாம் மாணவிகள் வந்து பாதுகாப்புடன் படிக்கிறார்கள்’’
என்று பாராட்டுப்பத்திரம் வாசித்தார். இது அத்தனை பா.ஜ.க.வினரையும் அதிரவைத்தது.
இந்த நிலையில் இன்று தி.மு.க. அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.
அதாவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை
கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஸ்டாலின் நிறைவேற்றியிருந்தார். அதன்படி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தார் தூக்குத்
தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை
தண்டனை வழங்கப்படும். இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர்,
அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னதான் நடக்கிறது என்று புரியாமல் எதிர்க்கட்சிகள் தலைகுழம்பிக்
கிடக்கிறார்கள்.