Share via:
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்
‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட
சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை
முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதோடு, உலகின் பிற பகுதிகளில் இரும்புக்
காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ் நாட்டில் இரும்பின் காலம் தொடங்கியதாக தமிழ் நாடு
அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று
வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தியதை
மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு
பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதில், தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு
பயன்படுத்தியதற்கான சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021- 22 ஆகிய ஆண்டுகளில்
மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நுண் இரும்பு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நுண்கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்ககாலம் வரை பண்பாட்டுக் கூறுகளைக்
கொண்டுள்ளது. மயிலாடும்பாறை கரிம மாதிரிகள், (கி.மு.2172) எனக் காலக் -கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரும்பு வாள், கத்தி, அம்புமுனை, ஈட்டிமுனை, கோடாரி ஆகிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி, அரிசி சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
சிவகளையில் 82 அகழாய்வுக் குழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிவகளை அகழாய்வில்
581 தொல்பொருட்களும் 160 முதுமக்கள் தாழிகளும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2685 ஆண்டுகளுக்கு
முற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியில்துறை ஆராய்ச்சிகளின்போது
சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகில் உள்ள
தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பகுப்பாய்வுகளின்
முடிவுகளின்படி கி.மு.3,345-ல் தென்னிந்தியாவில்
இரும்பு அறிமுகமானது தெரியவந்துள்ளது. இரும்பின்
காலம் 5400 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது என உலக ஆராய்ச்சி நிறுவனங்கள்
ஒப்புதல் வழங்கியுள்ளன.
உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே
இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து
தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச்
செய்து வருகிறது. தமிழின் தமிழர்களின் தொன்மைக்கான சான்று வெளியாகும் இந்த நேரத்தில்,
நாம் பேசி வந்தது வெறும் இனப்பெருமை மட்டும் அல்ல அது வரலாறு என்தை அறிவிக்கும் பெருவாய்ப்பை
பெற்றதற்காக பெருமை கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
தமிழ் இனத்துக்கு மரியாதை.