Share via:
கலாநிதி மாறன் சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்திருப்பதை
அவரது தம்பி தயாநிதி மாறனே அம்பலப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாறன் குடும்பத்துச்
சொத்து என்பது தமிழக மக்களின் சொத்து என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் அண்ணாமலையும்
இறங்கியிருப்பதால் விரைவில் அணுகுண்டு வெடிக்கும் என்கிறார்கள்.
மாறன் பிரதர்ஸ் சண்டை குறித்து அண்ணாமலை, ‘’திமுக எம்பி தயாநிதி
மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக
பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை (கோபாலபுரம் குடும்பத்தின்
பணம்) மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த மோசடி மூலம் ரூ.6,381 கோடி
அளவுக்கு ஈவுத்தொகையை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்
இது வெறும் ஊழல் அல்ல. இது கோபாலபுர குடும்பத்தின் பேராசையின்
பொது வெளிப்பாடு. இவர்கள் மக்களிடம் பதில் அளிக்க வேண்டும். சட்டம் செயல்பட வேண்டும்.’’
என்று கூறியிருக்கிறார். அதாவது தயாநிதி மாறன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்
கலாநிதியை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என்கிறார்.
இந்நிலையில் தயாநிதி மாறன் அனுப்பியிருக்கும் நோட்டீஸில் என்ன
இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தயாநிதி
மாறன் சார்பில் வழக்கறிஞர் கே.சுரேஷ் கடந்த ஜூன் 10 அன்று சன் நெட்வொர்க் தலைவரான கலாநிதி
மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, சன் நெட்வொர்க் கம்பெனி செயலாளர் ரவி ராமமூர்த்தி,
சன் நெட்வொர்க் தலைமை நிதி அதிகாரி மயிலாப்பூர் நடராஜன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியன்,
நிதி ஆலோசகர்கள் அண்ணாநகர் ஸ்ரீதர் சுவாமிநாதன், மந்தைவெளி சுவாமிநாதன் மற்றும் உதயா
டிவி, ஜெமினி டிவி பங்குதாரர் ஷரத்குமார் ஆகிய 8 பேருக்கு எதிராக அனுப்பியுள்ள வழக்கறிஞர்
நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
அந்த நோட்டீஸில், ‘’கடந்த 1985-ம் ஆண்டு சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்
என்ற நிறுவனத்தை தயாளு அம்மாளும், எனது தாயாரான மல்லிகா மாறனும் தொடங்கியபோது அந்நிறுவனத்தில்
இரு குடும்பத்துக்கும் தலா 50 சதவீத பங்குகள் இருந்தன. அதன்பிறகு இந்த நிறுவனம்
1996-ல் சன் டிவி லிமிடெட் என பொது நிறுவனமாக மாற்றப்பட்டது. அப்போது கிடைத்த போனஸ்
பங்குகள் மூலமாக எனது தந்தை முரசொலி மாறனுக்கு 95 ஆயிரம் பங்குகளும், தாயார் மல்லிகா
மாறனுக்கு 20 ஆயிரம் பங்குகளும் கிடைத்தன. அதன்பிறகு சன் டிவி நெட்வொர்க் லிமிட்டெட்
ஆக 2007-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
கடந்த செப்.15 2003 வரை கலாநிதி மாறனுக்கு சன் டிவி நிறுவனத்தில்
எந்தவொரு பங்கும் இல்லை. 2003-ல் தந்தை முரசொலி மாறன் இறந்த நிலையில், அந்த ஆண்டு
செப்.15 ஒரே நாள் இரவில் சன் டிவி நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை கலாநிதி மாறன் தனது
பெயருக்கு மாற்றியுள்ளார். ரூ.3,000 வரையுள்ள ஒரு பங்கை ரூ.10 முகமதிப்பில் தனக்குத்தானே
ஒதுக்கி மற்ற பங்குதாரர்களுக்கும் நம்பிக்கை துரோகத்தையும், நிதி மோசடியையும் செய்துள்ளார்.
பின்னாளில் அந்த பங்கு மதிப்பு ரூ. 3,500 கோடியாக உயர்ந்துள்ள
நிலையில், கலாநிதிமாறன் ரூ.1.20 கோடி மட்டுமே செலுத்தி, ரூ.3,498.80 கோடி மோசடி செய்துள்ளார்.
இந்த துரோகத்தால் 50 சதவீதமாக இருந்த குடும்ப உறுப்பினர்களின் பங்கு 20 சதவீதமாக குறைந்து
விட்டது. அண்ணன் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வீண்போய் விட்டது.
கடந்த 2023 அக்.7 அனுப்பிய முதல் நோட்டீஸூக்கு பதில் அளிக்காத
நிலையில் திடீரென எனது சகோதரி அன்புக்கரசிக்கு, 21 ஆண்டுகள் கழித்து ரூ.500 கோடியை
பாகத்தொகையாக கொடுத்திருப்பது உண்மையை மூடிமறைக்கும் அவரது நோக்கம் தெளிவாகிறது.
எனவே சன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் கடந்த 2003 செப்.15-ம்
தேதி நிலவரப்படி நிலைமையை மீண்டும் கட்டமைத்து தயாளு அம்மாள் மற்றும் மாறன் குடும்பத்தாரின்
சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு சேர வேண்டிய பங்குகள், பணப்பலன்கள், சொத்துக்கள், வருமானத்தை
திருப்பியளிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர்
மீ்து சிவில் குற்றவியல் ரீதியாக வழக்கு தொடரப்படும். அத்துடன் சட்டவிரோத பணப்பரிமாற்ற
தடைச்சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டங்களின் கீழும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க
அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, செபி, ஆர்ஓசி
உள்ளிட்ட அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் புகார் அளிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சன் டிவியின் பங்குகள் மளமளவென சரிந்துள்ளது. இந்நிலையில்
இதுதொடர்பாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைக்கு சன் டிவி நெட்வொர்க்
நிறுவனம், ‘’சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரருக்கும் அவரது குடும்ப
உறுப்பினருக்கும் இடையிலான சில விசயங்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவை. இதுதொடர்பாக வெளியான
செய்திகள் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை, அவதூறானவை.
நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் சட்டப்பூர்வ கடமைகளின்படி
செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான செய்திகள் நிறுவனத்தின் வணிகத்திலோ அல்லது அதன் அன்றாட
செயல்பாடுகளிலோ தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குதாரர்களின் குடும்ப விசயங்கள் முற்றிலும்
தனிப்பட்ட விவகாரங்களைச் சார்ந்தவை’’ என்று கூறப்பட்டுள்ளது.
பங்கு மோசடியில் துரோகம் செய்தாலும் அது குற்றமே, காவல் துறை நடவடிக்கை
எடுக்க வேண்டும், கலாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பங்குமோசடிக்கு கலாநிதி மாறன் ஜெயிலுக்குப் போனாலும் ஆச்சர்யம் இல்லை.