அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இன்னமும் தீர்வு கிடைக்காத நிலையில், ஐஐடி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வெளிவந்து அதிர வைத்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்த்தில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து மாணவி குற்றம் சாட்டிய இளைஞரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரின் பெயர் ஸ்ரீராம் (29) என்றும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய திராவிட மாடல் அரசுக்கும் எனது கடும் கண்டனம். பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும்; அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய மாநில அரசுகளும்; கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்; இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதற்கும், ஐ.ஐ.டி-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்கு மாணவி சென்றிருந்தபோது அத்துமீறல் என்றும் ஐ.ஐ.டி விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக  ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 14, மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற ஆண் மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடர்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐ.ஐ.டி வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி போன்று இந்த விவகாரமும் இழுத்தடிக்காமல் சட்டென முடிந்து போனதால் ஸ்டாலின் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link