Share via:
சமீபத்தில் டெல்லிக்குப் போய் வந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு
பா.ஜ.க. தலைமை புதிய அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்
தேர்தலில் தான் நிற்காமல் ஒதுங்கிக்கொண்டு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சி
செய்வதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி தினகரன் கொடுத்திருக்கும் பேட்டி முக்கியத்துவம்
பெறுகிறது.
வரும் 2026 தேர்தல் பற்றி பேசியிருக்கும் டிடிவி தினகரன், ‘’அதிமுக-வில்
பெரும்பான்மையானவர்கள் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் தனியாக
போட்டியிடுவது என இபிஎஸ் எடுத்த முடிவு மிகப்பெரிய அரசியல் தவறு என நினைக்கின்றனர்.
ஓபிஎஸ் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியதும் தவறு என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்த இடத்தில் மற்றொன்றையும் ஞாபகப்படுத்துகிறேன். “அதிமுக இடம்பெறும்
என்டிஏ கூட்டணியில் நான் இருந்தால் இபிஎஸ் பயப்படுவார். அதனால், நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
என்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் உரிய தொகுதிகளை வாங்கிக் கொடுங்கள்” என்று
2021-ல் டெல்லியில் இருந்து வந்த என்டிஏ தலைவர்களிடம் தெரிவித்தேன். இபிஎஸ் அதற்கு
சம்மதிக்காததால், திமுக-விடம் ஆட்சியை பறிகொடுக்கும் நிலை வந்தது. இப்போது, திமுக ஆட்சிக்கு
முடிவு கட்ட வேண்டுமென்றால், கடந்த தேர்தலின் போது சொன்னதைப் போலவே, கூட்டணி நலனுக்காக,
2026 தேர்தலில் நான் போட்டியிடாமல் விலகி இருக்கவும் தயாராக இருக்கிறேன்.
அதனால் தனித்து போட்டியிட்டு, திமுக-வின் வெற்றிக்கு மறைமுகமாக
உதவி செய்யாமல், என்டிஏ கூட்டணிக்கு வாருங்கள் என்று அதிமுக-வை அழைக்கிறேன். அவர்கள்,
இபிஎஸ் தலைமையில் வருகின்றனரா அல்லது மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கப்
போகிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை.
எல்லா மதத்திற்கும், சாதிக்கும் பொதுவான கட்சியான அதிமுக-வை, இபிஎஸ்
ஒரு வணிக நிறுவனம் போல் நடத்தி வருகிறார். அதில் சில முதலீட்டாளர்களைச் சேர்த்துக்
கொண்டிருக்கிறார். தென் மாவட்டங்களில் அவரை நம்பி முதலீடு செய்ய யாரும் தயாராக இல்லை.
வன்னியர் இடஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளை இபிஎஸ் அவசரகதியில் வெளியிட்டதால், இப்படி
ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அவரது செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பு மக்களவைத்
தேர்தலில் எதிரொலித்தது. கூட்டணி, பணபலத்தின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் 200 சீட்
ஜெயித்துவிடுவோம் என்று சொல்கிறார். ஆனால், மக்கள் பலம் அவர்களை வீழ்த்தி விடும்…’’
என்று கூறியிருக்கிறார்.