Share via:
அரசியல் என்றாலே
சாக்கடை என்று எண்ணும் இன்றைய தலைமுறைக்கும் ஒற்றை நம்பிக்கை மனிதராக நிற்பவர் தோழர்
நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26ம் தேதி தான்
தோழர் இரா.நல்லகண்ணுவின் பிறந்தநாள் என்பது அதிசய ஒற்றுமை.
கொள்கைகளில் வித்தியாசம்
வேறுபாடு இருந்தாலும் அனைத்து கட்சியினரும் மதிக்கும் ஒரே தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு
இன்று தொடங்குகிறது. இந்த வயதிலும் போராட்ட களத்தில் போய் நிற்கிறார். பணம், அதிகாரம்,
புகழ் போன்ற எதையும் தன் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாத அதிசயப்பிறவி.
தூத்துக்குடி மாவட்டம்
திருவைகுண்டத்தில் இராமசாமி – கருப்பாயி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்
நல்லகண்ணு. அப்பா ராமசாமி அழுத்தமான வைணவ பக்தர். வைகுண்டம் கார்னேசன் (இன்றைய கேஜிஎஸ்)
பள்ளியில் படித்தவர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தார்.
இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’
போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம்
அவரை அணைத்துக்கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.
ஆயுதப் போராட்டம்தான்
புரட்சியைக் கொணர முடியும் என்று கருதியவர் நல்லகண்ணு. இரண்டு ஆண்டு காலம் தலைமறைவில்
இருந்த தோழர் நல்லகண்ணு 1949 டிசம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார். எந்தப் பண்ணையார்களை
எதிர்த்து நீதி கேட்டாரோ அந்தப் பண்ணையார்கள் முன்பாகவே அடித்து சித்திரவதை செய்யப்பட்டார்.
கையும் காலும் கட்டப்பட்டு முச்சந்தியில் போட்டு அடித்தார்கள். அவரது மீசையை சிகரெட்
நெருப்பால் சுட்டார்கள். மலை உச்சிக்கு தூக்கிச் சென்று, ‘இதில் இருந்து தான் பலரையும்
தூக்கிப் போட்டேன், இப்போது உன்னையும் போடப் போகிறேன்’ என்றார் போலீஸ்காரர். அப்போதும்
வாயைத் திறக்காமல் நெஞ்சுரத்தோடு இருந்தவர்தான் நல்லகண்ணு. இதையடுத்தே மீசை வளர்ப்பதை
நிறுத்திவிட்டார். இந்த வழக்கில் நல்லகண்ணு, தோழர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட 11 பேருக்கு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1951 முதல் 1956 வரையில் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார்.
நல்லகண்ணுவுக்குப்
பெண் கொடுக்க முன்வந்தவர் சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமி. 5.6.1958-ல் நெல்லையில்
திருமணம். வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி நல்லகண்ணுவுக்கு உற்ற தோழராகவும் இருந்தார்
ரஞ்சிதம் 1.12.2016 அன்று மறைந்தார். நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான
அன்னச்சாமி சாதி வெறியர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். நல்லகண்ணு உணர்ச்சி வசப்பட்டிருந்தால்
அப்போது எழயிருந்த கலவரத்தைத் தடுத்து நிறுத்னார். அவருக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால்
பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார்.
2010-ல் தாமிரபரணி
ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித்
தடை வாங்கினார். இப்போது ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் போர்வையில் மணல் எடுக்கப்படுவதற்கு
எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்.
நல்லகண்ணுவின்
80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதைக்
கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு. தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’
கொடுத்து ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கியது. பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர்
சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
இதுவரை மூன்று தேர்தல்களில்
போட்டியிட்டு, மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார். 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில்
அம்பாசமுத்திரத்திலும், 1999 மக்களவைத் தேர்தலில் கோவையிலும் தோல்வி அடைந்தார். இது
தான் ஜனநாயகம் என்பதை ஏற்றுக்கொண்டவர் நல்லகண்ணு.
இப்போது தோழர் நல்லகண்ணு,
பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளமாக நம் முன் காட்சியளிக்கிறார். பொதுவுடமை என்பது
எது என்பதன் அடையாளமும் அவர்தான். மார்க்ஸ் – அம்பேத்கர் – பெரியார் ஆகிய மூன்றின்
கூட்டுத் தத்துவமாக தமிழ்நாட்டில் பொதுவுடமைச் சிந்தையை வளர்த்த – வார்ப்பித்த ஆளுமைகளில்
ஒருவர்தான் தோழர் நல்லகண்ணு. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் நீட்சியாக, மாவீரர் ஜீவாவின்
தொடர்ச்சியாக இருப்பவர் தோழர் நல்லகண்ணு.
வாழ்க்கையில் இறுதி
வெற்றி என்று எதுவுமில்லை. வாழ்க்கை முழுக்கவே போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று
வாழ்ந்து வழிகாட்டும் தோழர் நல்லகண்ணு வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமைப்படுவோம்.