Share via:
ஒவ்வொரு தேர்தலுக்கும்
ஏதேனும் ஒரு கட்சியிடம் பா.ம.க.வை அடமானம் வைத்து பெட்டி வாங்கும் கட்சி என்று டாக்டர்
ராமதாஸ்க்கு நல்ல பெயர் உண்டு. இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு பெட்டி மட்டும் வாங்குவது
போதாது, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பெட்டி வாங்குவதற்காகவே ராமதாஸும் அன்புமணியும்
வெளிப்படையாக மோதல் நடத்தி நாடகம் போடுவதாக ஒரு பேச்சு உலவுகிறது.
இதுகுறித்துப் பேசும்
பா.ம.க. மூத்தபுள்ளி ஒருவர், ‘’கட்சி விவகாரங்களில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் அவ்வப்ப்போது
மோதல் நடப்பது உண்டு. அது எல்லாமே நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகத்தான் இருக்கும். எல்லாமே
சாதாரண சண்டை. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பயணிக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்த
போதும் அன்புமணி ஆசைப்பட்ட வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்ந்தது. இதற்கே அவர்கள்
சண்டை போடவில்லை.
அதேநேரம், நிறைய
நிர்வாகிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுவது உண்மை. இரட்டை இலையுடன் கூட்டணி வைத்தால் எல்லா செலவுகளையும்
அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அதோடு லோக்கல் நிர்வாகிகளுக்கும் பணம் கிடைக்கும்.
அதனாலே இதனை விரும்புகிறார்கள்.
எடப்பாடி கொடுக்கத்
தயாராக இருந்த பெட்டியை வாங்க முடியாத சோகம் ராமதாஸ்க்கு இருந்தது. அதேநேரம் பா.ஜ.க.வை
பகைத்துக்கொள்ளவும் முடியாது. ஆகவே, இந்த தேர்தலில் ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியிடமும்
பா.ஜ.க.விடம் பெட்டி வாங்குவதற்காக இப்படி வெளிப்படையாகப் பேசி கட்சியை உடைத்துச்சென்று,
இரண்டு கட்சியாக மாற்றி பணம் சம்பாதிக்க பிளான் போடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
ராமதாஸ் நிறுவனர்
என்றாலும் இப்போது சகல அதிகாரமும் அன்புமணிக்கு மட்டுமே இருக்கிறது. ஆகவே, முகுந்தன்
நியமனத்தை ஒரு நிமிடத்தில் அன்புமணியால் நிராகரிக்க முடியும். அப்படியிருக்கும்போது
தேவையில்லாமல் மேடையில் சண்டை போடுவது போன்று பிரச்னை செய்திருக்கிறார். இது நிச்சயம்
நாடகம் தான். இரண்டு கட்சியாக்க முயற்சிக்கிறார்கள்’’
என்றார்கள்.
‘’கட்சி இரண்டாக
உடைந்தால் ஜெயிக்க முடியாமல் போய்விடுமே..?’’
‘’ஒன்றாக இருந்தாலும்
ஜெயிக்க முடியவில்லை. ஆகவே, இரண்டாகப் பிரிந்துவிட்டு அதனாலே ஜெயிக்கவில்லை என்று சொல்லிவிடலாம்
என்றே திட்டமிடுகிறார்கள். அன்புமணிக்கு கட்சியும் சின்னமும் இருக்கும். அவர் பா.ஜ.க.
கூட்டணியில் தொடர்வார். டாக்டர் ராமதாஸ் வன்னியர் பெயரில் புதிய கட்சி தொடங்கி எடப்பாடியுடன்
நிற்பார். பனையூருக்கு ஒரு பெட்டியும் தைலாபுரத்துக்கு ஒரு பெட்டியும் கிடைக்கும்’’
என்கிறார்கள்.
இதெல்லாம் நம்புற மாதிரி இல்லைன்னாலும் இவங்க பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்