Share via:
புதுச்சேரி மாநிலம் பாட்டானூரில் பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிராமதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில இளைஞர் அணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமித்ததை எதிர்த்து அன்புமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த முகுந்தன் என்பவர் ராமதாசின் மூத்த மகளான காந்திமதியின் மகன்தான். மேலும் இவர் கட்சியில் இணைந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை குடும்பக் கட்சி என்று அனைவரும் விமர்சிப்பார்கள் என்றும் தனது கருத்தை எடுத்துரைத்தார். ஆனால் ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். விருப்பம் இல்லையென்றால் யாராக இருந்தும் கட்சியைவிட்டு விலகலாம்’’ என்று ஆவேசமாக மேடையிலேயே பேசினார்.
இதைத்தொடர்ந்து சரி சரி என்று சொன்ன அன்புமணியும், என்னுடைய அலுவலகம் பனையூரில் உள்ளது என்று கூறியதுடன் தனது கைப்பேசி எண்ணையும் அறிவித்தார். அரசல் புரசலாக இருந்த உட்கட்சி மோதல்,இப்படி மேடையில் வெடிக்கும் என்று எதிர்பாராத தொண்டர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்தவிதமான புது யுக்தி என்று சில அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.