Share via:
இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு
நீதி கேட்டு போராட்டம் செய்ய வந்த, பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவரது
வாகனத்தை விட்டு இறங்கிய உடனே, போராட்டம் நடத்த அனுமதி மறுத்து காவல்துறையினர் கைது
செய்திருக்கின்றனர். இதையடுத்து பா.ம.க.வினர் குஷியாகி ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக
மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். அ.தி.மு.க.
சார்பில், ‘யார் அந்த சார்?’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டதுடன் மாலில் போராட்டம் நடத்தினார்கள்.
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முற்பட்ட சீமான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
விஜய் கட்சியினர் நோட்டீஸ் கொடுத்து கைதானார்கள்.
எல்லா கட்சிகளும்
ஸ்கோர் செய்துவிட்ட நிலையில் தன்னுடைய பங்கிற்கு பா.ம.க.வையும் இன்று களத்தில் இறக்கிவிட்டார்
அன்புமணி. முன்னதாக இன்று சென்னையில் பல இடங்களில், ‘அடுத்தது நானா? ஐம் ஐ நெக்ஸ்’
என்று பா.ம.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதையடுத்து ஆர்ப்பாட்டத்துக்குத் தடை
விதிக்கப்பட்டாலும் செளமியா அன்புமணி போராட்டத்துக்குச் சென்று கைதாகியிருக்கிறார்.
பாமகவின் போராட்டத்திற்கு
அனுமதி கோரி பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
நீதியரசர் வேல்முருகன், பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவதை விட்டுவிட்டு, இதனை
அரசியலாக்குவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருப்பதாக குற்றம் சாட்டி அனுமதி மறுத்துவிட்டார்.
தி.மு.க. எதிர்ப்பு
நிலையில் இருந்த அத்தனை கட்சிகளும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் போராட்டம் நடத்திவிட்டனர்.
இந்த வழியில் அடுத்து பிரேமலதாவும் வித்தியாசமான முறையில் ஒரு போராட்டம் அறிவிப்பார்
என்று சொல்லப்படுகிறது. அவரும் கைது செய்யப்படுவதைப் பார்க்க மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.