Share via:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட
வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நெருங்கிய வட்டாரத்தில்
எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில்
வெற்றிபெற்ற திருமகன் ஈ.வெ.ரா. 67,300 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப்
பிறகான 2023 ஆண்டு தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அதாவது எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர்
தென்னரசு 49,981 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளைப்
பெற்றார். வாக்கு வித்தியாசம் மட்டும் 66,575ஆக இருந்தது. அந்த அளவுக்கு தி.மு.க. ஒட்டுமொத்த
அமைச்சர்களையும் களம் இறக்கியது.
கடந்த தேர்தலில் தி.மு.க. மாஸ் காட்டியது போன்று இந்த தேர்தலிலும்
அப்படியொரு வெற்றிக்கு ஆசைப்படும் என்று சொல்ல;ப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி
தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடந்துள்ளது. அதில், அனைத்து
எதிர்க் கட்சிகளையும் ஒன்று சேர்த்து பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று கூறப்பட்ட யோசனையை
எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஓர் ஆண்டுக்குள் மீண்டும் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில்
தேவையில்லாமல் அதிகம் செலவழிக்க முடியாது என்பதாலும், வரயிருக்கும் பொதுத்தேர்தலுக்கு
முன்னோட்டமாகவும் இந்த தேர்தலை சந்திக்க நினைக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு
வழங்குமாறு பா.ஜ.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளையும் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளார்.
அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் களத்தில் இறங்குவாராம்.
ஒரு வேளை எதிர்க் கட்சிகள் பொதுவேட்பாளர் திட்டத்தை ஏற்கவில்லை
என்றால் தேர்தல் புறக்கணித்துவிட்டு நேரடியாக 2026 தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று
நினைக்கிறார். சபாஷ், சரியான முடிவு என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குஷியாகி இருக்கிறார்கள்.