Share via:
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயதான எல்.கே.ஜி. மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய 4 வயதான லியா என்ற மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 3) உணவு இடைவெளியின் போது சிறுமி லியா கழிவுநீர் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த கழிவுநீர் தொட்டிக்கு மேல்புறம் மூடப்பட்டிருந்த தகரமூடி துருப்பிடித்து பழுதாகியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக லியா அந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதை அறிந்த ஆசிரியர்கள், உடனடியாக விரைந்து சென்று லியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். லியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லியாவின் மரண செய்தி கேட்டு பெற்றோர் கதறி அழுததை பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர்.
இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அனைத்து பள்ளிகளும் சரியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.