Share via:
அரசியல்வாதிகளின் சொத்து ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புபவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இப்போது அவரது மனைவி சொத்து வாங்கிய விவகாரம் சமூகவலைதளத்தில் சக்கை போடு போடுகிறது. ஆனால், இதுவரை அண்ணாமலை இது குறித்து வாய் திறந்து பேசவே இல்லை.
சமீபத்தில், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் மச்சான் என்பது தெரியவந்தது. இந்த செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் 10 கோடி ரூபாய் ரொக்க பணம், 240 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு நேரடியாக பதில் அளிக்காத அண்ணாமலை, ‘’எனக்கு செந்தில் பாலாஜி, ஜோதிமணியும் சொந்தக்காரர்கள் தான்’’ என்று விஷயத்தை திசை திருப்பினார். இந்த நிலையில் அண்ணாமலையின் மனைவி அகிலா 70 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆதாரங்களை இணையத்தில் கசிய விட்டுள்ளனர். இதையடுத்து அண்ணாமலை எதிர்ப்பாளர்கள், ’’அகிலா என்ன தொழில் செய்து 70 கோடி சம்பாதித்தார் என அமலாக்கத்துறை கேள்வி கேட்குமா’ என்று கொதிக்கிறார்கள்.
இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘’அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள செலக்கரிச்சல் கிராமத்தில் ஏக்கர் 2-3 கோடி தான். அப்படிப்பார்த்தாலும் 1.5 கோடி தான் வருகிறது. ஒரு ஐடி நிறுவனம் நடத்துகிறவர் ரூ. 1.5 கோடிக்கு இடம் வாங்க முடியாதா? ஒரு ஏக்கர் கூட இல்லாத 7 லட்சம் மதிப்புள்ள 80 சென்ட் இடத்தை 70 கோடி சொத்து என்று உருட்டினால் எப்படி?. இது எடிட் செய்யப்பட்ட ஆவணம்’’ என கொதிக்கிறார்கள்.
அதுசரி, அப்படியே இருக்கட்டும். தன்னுடைய செலவுக்கே வேறு சிலர் பணம் அனுப்புகிறார்கள் என்று சொல்லும் அண்ணாமலைக்கு இந்த சொத்து வாங்க எப்படி பணம் வந்தது என்று கேள்வி கேட்கிறார்கள்.