Share via:
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும்
ஆளுநரைக் கண்டித்தும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும்
வித்தைகளைச் செய்யும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில்
இன்று காலை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கவர்னருக்கு எதிர்ப்பு
என்று சொல்லப்பட்டாலும், இந்த போராட்டத்தின் நோக்கம், யார் அந்த சார் என்று தமிழகத்தைக்
கலக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
இன்று சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட
ஆர்ப்பாட்டத்தில், கவர்னருக்கு கெட் அவுட் கோஷம் போடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவேண்டாம் என நினைக்கும்
கவர்னருக்கு தமிழர்களின் வரிப்பணத்திலுருந்து வரும் சம்பளம் மட்டும் எதற்கு? என்று
கோஷம் எழுப்பினார்கள்.
அதேநேரம், கவர்னரை எதிர்த்துப் போராட்டம் என்று அறிவித்துவிட்டு,
இன்று கவர்னரும் எடப்பாடி பழனிசாமியும் இருக்கும் போஸ்டரையே நகரம் முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. கடுமையாக முன்வைக்கும் யார் அந்த சார் போஸ்டர் போராட்டத்துக்குப் பதிலடி
போன்று இந்த போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஆளுநர் வெளிநடப்பு செய்தது தவறு இல்லை, அது அவரது சொந்த
பிரச்னை என்று எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்திருந்தார். அவர் முதல்வராக இருந்த காலத்திலும்
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தான் மரபாக இருந்தது, அதை மறந்துவிட்டு ஆளுநருக்கு
ஜால்ரா போடுவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
தி.மு.க. ஒட்டியிருக்கும் போஸ்டரில், ‘’சார், நான் கோஷம் போடுற
மாதிரி போடுறேன். நீங்க நேக்கா வெளியே போயிடுங்க’’ என்று எடப்பாடி பழனிசாமி கையைக்
கட்டிக்கொண்டு பேசுவது போலவும் அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ‘’சூப்பர்யா நீதாயா உண்மையான
விசுவாசி’’ என்று பாராட்டுவதாகவும் படம் போட்டுள்ளனர். அதாவது, தமிழ்நாட்டில் அத்துமீறும்
ஆளுநரை அ.தி.மு.க. கள்ளக் கூட்டணி வைத்து பாதுகாப்பதாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கவர்னரையும் அ.தி.மு.க.வையும்
குற்றவாளியாக மக்கள் முன்பு காட்டுவதற்காகவே தி.மு.க.வினர் இந்த போராட்டத்தைத் திட்டமிட்டு
நடத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
தெரிவிக்கின்றன.
இப்போது ஜனநாயக முறைப்படி எந்த போராட்டத்திற்கும் ஆர்பாட்டத்திற்கும்
அனுமதி அளிக்காத காவல்துறை இந்த போராட்டத்திற்கு மட்டும் சில மணி துளிகளில் அனுமதி
அளித்தது எப்படி?? ஐந்து நாட்களுக்கு முன்னரே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும்
என்ற விதி தளர்த்தப்பட்டது ஏன் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.