Share via:
மத்தியில் ஆளும்
பா.ஜ.க.வுக்கு கைப்பாவையாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல்
ஆணையம் போன்றவை இயங்கிவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன.
இது உண்மை என்று நிரூபிப்பது போன்று எதிர்க்கட்சிகள் மற்றும் முரண்டு பிடிக்கும் கட்சிகள்
மீது மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடக்கின்றன.
வரும் சட்டமன்றத்
தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
ஆனால், வரும் தேர்தலில் கூடுதல் எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டிய கட்டாயத்துக்கு பா.ஜ.க.
ஆளாகியுள்ளது. எனவே, எப்படியும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுகிறார்கள்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றால் நெருக்கடி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி
அக்கா மகன் வெற்றிவேல் ஆகியோருடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை
செய்துவருகிறது.
ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய
உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான, கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம்
தமிழகத்தின் சென்னை, கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களிலும் அரசு
மற்றும் தனியார் கட்டுமானங்களைப் பெரிய அளவில் செய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான
நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் என். ராமலிங்கம் அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர். கட்டுமான நிறுவன அதிபர் என்.ராமலிங்கத்தின்
இளைய மகனுக்கும், பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் இளைய மகளுக்கும்
திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சுப்பிரமணியம் வீட்டில் தான் எடப்பாடி பழனிசாமியும்
தனது மகனுக்கு பெண் எடுத்துள்ளார்.
இந்நிலையில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் சென்னை, ஈரோடு,
பெங்களூர் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோவையில் இருந்து வந்த வருமான
வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனனர். கோவை, சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை,
திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான நிறுவனங்கள், எஸ்பிஎல் நிறுவனம்
மற்றும் எஸ்.ஆர்.மெட்டல் நிறுனவனத்திலும் சோதனை நடைபெற்றது
மேலும், ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி பகுதியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின்
அக்கா மகன் வெற்றிவேல் முதன்மை இயக்குநராக இருக்கும் மரவள்ளி கிழங்கு ஆலை அலுவலகத்திலும்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின்
வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து வருமான வரித்துறை
எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி
கொடுப்பதற்காகவே இந்த ரெய்டு என்று கூறப்படுகிறது. வரும் 11ம் தேதி நடைபெற இருக்கும்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல முடிவு அறிவிக்க வேண்டும்
என்று பா.ஜ.க. ஆசைப்படுகிறது.
தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் எடப்பாடியை
ஒன்று சேர்க்க பா.ஜ.க. விரும்புகிறது. இந்த நெருக்கடியை எடப்பாடி பழனிசாமி தாக்குப்பிடிப்பாரா
என்பது விரைவில் தெரிந்துவிடும்.