Share via:
இவிஎம் தேர்தல் குறித்து
யாரும் எந்தக் கேள்வியும் கேட்ககூடாது என்பதன் அடிப்படையில் இரவுவோடு இரவாக தேர்தல்
நடைமுறை திருத்த சட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் வாக்குச்சாவடியில்
வைக்கப்படும் ஃபுட்டேஜ் முதலான தகவல் இனி யாருக்கும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.
இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும்
செயல் என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில்
மாலை 5 மணிக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டன. இது குறித்து
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹரியானாவில் கடந்த
அக்டோபரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து,
வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா என்பவர் இந்தத் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான
வாக்குகள் தொடர்பான வீடியோ, சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ஆவணங்களின் நகல்களைக்
கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமீபத்தில் தாக்கல்
செய்தார்.
அதை விசாரித்த உயர்
நீதிமன்றமும், பிரச்சா கோரிய ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான், தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பெற வழிவகுக்கும்
தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் 93-வது விதியில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையுடன்
மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்தத்
திருத்தத்துக்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி, `தேர்தல் தொடர்பான
அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்கும்.’ ஆனால், தற்போது இந்த விதியில் மேற்கொண்ட
திருத்தத்தின்படி, `தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து
ஆணவங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்கும்.’
ஆனால் இப்போது திருத்தப்பட்ட
விதியில், `வேட்புமனு படிவங்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், தேர்தல்
கணக்கு அறிக்கைகள் மட்டுமே பொது ஆய்வுக்குக் கிடைக்கும் ஆவணங்கள்.’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே, மின்னணு ஆவணங்கள்
பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது. அதாவது, சிசிடிவி காட்சிகள், வேட்பாளர்களின் வீடியோ
பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்கள் பொதுமக்கள் அணுகும் வகையில் பொது ஆய்வுக்குக்
கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது. இந்த விதியில்
குறிப்பிடப்படாத எந்த ஆவணங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்காது என்பது திட்டமிட்டு இவிம்
மோசடியை மறைக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கொதிக்கிறார்கள்.
இதன் மூலம் தேர்தல்
நடத்தையில் சந்தேகம் இருந்தால் அதன் மீது கேள்வி கேட்கும் உரிமை பறிக்கப்படுகிறது.
தேர்தல் மோசடிக்கு ஆதரவாகவே இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம்
சாட்டும் காங்கிரஸ் கட்சி, இதை நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதாகக் கூறியுள்ளது. நீதி
கிடைக்குமா என்று பார்க்கலாம்.

